Home நாடு கைதிகள் மறுவாழ்வுத் திட்டம் – சரவணன் தொடக்கி வைத்தார்

கைதிகள் மறுவாழ்வுத் திட்டம் – சரவணன் தொடக்கி வைத்தார்

505
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கைதிகளின் வாழ்வு சிறக்க, மறுவாய்ப்பாக அமையும் ஸ்கோப் எனப்படும் திட்டத்தை (SCOPE – Second Chances and Opportunities for People to Excel) மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி செயல்படுத்தி வருவதற்கு மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அந்தத் திட்டத்தின் அறிமுகவிழாவை நேற்று புதன்கிழமை (நவம்பர் 17) சரவணன் தொடக்கி வைத்தார்.

“ஸ்கோப் எனப்படும் மறுவாழ்வுத் திட்டத்தின் மூலம், தண்டனைக் காலத்தின் போதே கைதிகளுக்குத் திறன் அடிப்படையிலான பயிற்சிகளை எச்ஆர்டிஎப் கோர்ப் (HRD Corp) எனப்படும் மனித வள மேம்பாட்டு நிதி மையம் வழங்கும். இதன்வழி தண்டனைக் காலம் முடிந்ததும் வேலை வாய்ப்பு அல்லது வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு அந்த முன்னாள் கைதிகளுக்கு இலகுவாகும். ன்னாள் கைதிகளின் வாழ்வு சிறக்கும், மீண்டும் தப்பு செய்வதற்கான தேவையும் இருக்காது” என்றும் சரவணன் கூறினார்.

#TamilSchoolmychoice

மலேசிய சிறைத்துறையின் புள்ளிவிவரப்படி 2019-இல் 140,000 (ஒரு லட்சத்து நாற்பதாயிரம்) பேர் சிறையில் இருந்துள்ளனர். கைதிகளைப் பராமரிக்க, அரசாங்கம் ஆண்டுதோறும் 1.6 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக செலவழிக்கிறது. கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைக்கவும் இந்தத் திட்டம் உதவும் என்பதில் ஐயமில்லை என்றும் சரவணன் மேலும் தெரிவித்தார்.

ஆக சிறையில் இருக்கும் போதே கைதிகள், திருந்தி வாழ்வதற்கான சிந்தனையும், வேலைக்கான முயற்சியும், வணிகம் தொடங்குவதற்கான பயிற்சியும் தந்து சமூக வாழ்க்கைக்கு விரைவாகத் திரும்ப கைதிகளைத் தயார்படுத்த உதவும் என்பதில் ஐயமில்லை. முன்னாள் கைதிகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகம் ஒரு பிரகாசமான எதிர்காலத்தைப் பெற SCOPE திட்டம் அத்தியாவசியமாகிறது.

முதல் கட்டமாக, 2021-இல் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பும், 2ஆம் கட்டமாக 2022-இல் 5,000 பேருக்கும் 3ஆம் கட்டமாக 2023-இல் 15,000 பேருக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் வாய்ப்புகள் பெருகும்.

இந்த இலக்கின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், பல்கலைக்கழகங்கள், சங்கங்கள் மற்றும் அரசுசாரா அமைப்புகளுடன் இணைந்து மனித வள மேம்பாட்டு நிதி மையம் வழிகாட்டி, ஆலோசனை அமர்வுகளை வழங்கும்.

இவ்வேளையில் இந்தத் திட்டத்தில் பங்கு கொள்ளும் முதலாளிகள், பயிற்சி வழங்குனர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்ட சரவணன், இன்னும் அதிகமான முதலாளிகள் முன்னாள் கைதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

“மேலும் பயிற்சி வழங்குநர்களும் பல்வேறு துறைகளில் திறன் பயிற்சிகளை வழங்கத் தயாராக இருக்க வேண்டும். எதிர்காலத்தின் யாரும் விடுபடாமல் இருக்க மலேசியக் குடும்பமாக அனைவரையும் அரவணைத்துச் செல்வோம்” என்றும் சரவணன் தனதுரையில் தெரிவித்தார்.