(மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. தஞ்சோங் பிடாரா. இங்கு பெர்சாத்து கட்சி சார்பில் போட்டியிடும் மாஸ் எர்மியாத்தி வெற்றி பெற்றால் – அதே சமயத்தில் மலாக்காவில் பெரும்பான்மை சட்டமன்றங்களை பெரிக்காத்தான் கூட்டணியும் கைப்பற்றினால் – அவரே முதலமைச்சராவார் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன. அது குறித்து விவாதிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
மலாக்கா சட்டமன்றத் தொகுதிகளில் பரபரப்பான நட்சத்திரத் தொகுதிகளாக உருவெடுத்திருக்கும் லெண்டு, புக்கிட் கட்டில் ஆகிய இரண்டு தொகுதிகளைப் பார்த்தோம்.
லெண்டுவில் தேசிய முன்னணி முதலமைச்சர் வேட்பாளர் சுலைமான் முகமட் அலி- புக்கிட் கட்டிலில் பக்காத்தான் ஹராப்பான் முதலமைச்சர் வேட்பாளர் அட்லி – ஆகிய இருவரின் வெற்றி வாய்ப்புகளைப் பார்த்தோம்.
மூன்றாவது பெரிய கூட்டணியாகப் போட்டியிடும் பெரிக்காத்தான் நேஷனல் இதுவரையில் தனது முதலமைச்சர் வேட்பாளராக யாரையும் பெயர் குறிப்பிடவில்லை.
நாங்கள் ஒரு வேட்பாளரை முடிவு செய்து வைத்திருக்கிறோம். தேர்தல் முடிந்தவுடன் நாங்கள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றால் அந்த வேட்பாளரை அறிவிப்போம் என பெரிக்காத்தான் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்திருக்கிறார்.
எனினும், அரசியல் பார்வையாளர்களின் கவனம் அனைத்தும் தஞ்சோங் பிடாரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பெர்சத்து- பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் டத்தோ மாஸ் எர்மியாத்தி பக்கம் திரும்பியுள்ளது.
பிரபல உல்லாச விடுதிகளைக் கொண்டிருக்கும் தஞ்சோங் பிடாரா வாரந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுப் பயணிகளை ஈர்த்து வந்த கடற்கரையோர சுற்றுலாத்தல வட்டாரமாகும்.
இங்கு போட்டியிடும் டத்தோ மாஸ் எர்மியாத்தி தற்போது பிரதமர் துறையில் துணை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2018-ஆம் ஆண்டில் அம்னோ சார்பில் மஸ்ஜிட் தானா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 8,159 வாக்குகள் பெரும்பான்மையில் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார் டத்தோ மாஸ் எர்மியாத்தி .
ஆனால், உடனடியாக கட்சி மாறி துன் மகாதீர் தலைமையில் பெர்சத்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் அவர்.
அவருக்குத் துணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. மொகிதின் தலைமையிலான பெர்சத்து கட்சியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
அந்த மஸ்ஜிட் தானா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 5 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றுதான் தஞ்சோங் பிடாரா.
2018-இல் அம்னோ தேசிய முன்னணி சார்பாக வெற்றி பெற்று விட்டு, பின்னர் கட்சி தாவி பெர்சத்துவுக்குச் சென்ற அவரை தஞ்சோங் பிடாரா சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் தண்டிப்பார்களா?
அல்லது அவரை மீண்டும் ஏற்றுக் கொள்வார்களா என்பதை மலாக்கா தேர்தல் முடிவுகள் காட்டும்.
94 விழுக்காட்டு மலாய் வாக்காளர்கள்
10,133 வாக்காளர்களைக் கொண்ட தஞ்சோங் பிடாரா தொகுதியில் 94 விழுக்காட்டினர் மலாய் வாக்காளர்கள். 4 விழுக்காட்டினர் சீனர்கள். 2 விழுக்காட்டினர் மட்டுமே இந்தியர்கள்.
எனவே, இந்தத் தொகுதியில் நடக்கும் போட்டியில் அதிகப்படியான மலாய் வாக்காளர்களை யார் ஈர்க்கின்றனர் என்பதைப் பொறுத்தே வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு அமையும்.
பிகேஆர்- பக்காத்தான் சார்பில் சைனால் ஹாசான் இங்கு போட்டியிடுகிறார். அம்னோ தேசிய முன்னணி சார்பில் டத்தோஸ்ரீ அப்துல் ராவுப் யூசோ இங்கு போட்டியிடுகிறார்.
இவர் மாநில அம்னோ- தேசிய முன்னணியின் தலைவருமாவார். அதன் காரணமாகவும் இந்தத் தொகுதி அனைவராலும் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது.
தஞ்சோங் பிடாரா தொகுதியில் மாஸ் எர்மியாத்தி வெற்றி பெற்று பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியும் மலாக்கா மாநிலத்தில் பெரும்பான்மை பெறும் அதிசயம் நிகழ்ந்து விட்டால், அதைத் தொடர்ந்து பெரிக்காத்தான் கூட்டணியின் முதலமைச்சராக மாஸ் எர்மியாத்திதான் இருப்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம் சபா மாநிலத்தில் பின்பற்றிய அதே அரசியல் வியூகத்தை பெரிக்காத்தான் நேஷனல் மலாக்கா மாநிலத்திலும் முன்னெடுத்திருக்கிறது.
சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் வியூகம்தான் அது.
ஆனால், தேசிய முன்னணியும் பக்காத்தான் ஹராப்பானும் தங்களின் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்த பின்னர் பெரிக்காத்தான் மட்டும் அவ்வாறு முதலமைச்சரை அறிவிக்காமல் தேர்தலைச் சந்திப்பது ஒரு சாதகமான வியூகமா? என்பது தெரியவில்லை.
மேலும், ஒரு முக்கிய வித்தியாசம் என்னவென்றால் சபா சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது, மொகிதின் யாசின் பிரதமராக இருந்தார். அவரை முன்வைத்து, அவரின் முகம் காட்டி, பிரச்சாரம் செய்யப்பட்ட சபா தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற முடிந்தது.
தனித்துப் பெரும்பான்மை பெறாவிட்டாலும் அம்னோ – மற்ற சபா கட்சிகளுடன் இணைந்து மாநில அரசாங்கத்தை பெரிக்காத்தான் நேஷனல், சபாவில் அமைத்து இன்றுவரை அங்கு ஆட்சி புரிந்து வருகிறது.
அதே வியூகத்தை மீண்டும் மலாக்கா மாநிலத்தில் செயல்படுத்த முடியுமா? என்பது கேள்விக்குறிதான்.
எனினும், துணை அமைச்சராக இருக்கும் மாஸ் எர்மியாத்தி சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்று அதேவேளையில் மலாக்காவில் பெரும்பாலான சட்டமன்றங்களை பெரிக்காத்தான் கூட்டணி கைப்பற்றும் அபூர்வமான காட்சி அரங்கேறினால் மலாக்காவில் முதல் பெண் முதலமைச்சராக மாஸ் எர்மியாத்தி நியமிக்கப்படும் அதிசயமும் நிகழும்.
அந்த அதிசயம் நிகழ்ந்தால் மலேசியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கும் முதல் பெண்மணியாக மாஸ் எர்மியாத்தி திகழ்வார்.
அந்த வரலாற்றுப் பெருமையை அவருக்குப் பெற்றுத் தருமா தஞ்சோங் பிடாரா? என்ற கேள்வியால் பரபரப்பான நட்சத்திரத் தொகுதியாக உருமாறியிருக்கிறது அந்தத் தொகுதி.