கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை மக்களவை விவாதத்தில் கலந்து கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவர்களின் இந்த அணுகுமுறை மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் இல்லாததை வெளிப்படுத்துவதாக தோன்றுகிறது என்று அவர் கூறினார்.
“போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாததால், இரண்டாவது முறையாக மக்களவை தாமதமாகத் தொடங்கப்பட்டது. நான் அவர்களிடம் பேச வேண்டியுள்ளது. தேர்ந்தெடுப்பதற்கு முன்பதாக, நாடாளுமன்ற உறுப்பினராக ஆக வேண்டும் என்ற ஆசை. தேர்ந்தெடுக்கப்பட்டபோது, மக்களுக்கு சேவை செய்வதில் அவர்கள் மிகவும் தீவிரமாக இருப்பதாகத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.
நேற்று புதன்கிழமை, மக்களவை இரண்டு நிமிடம் தாமதமாகத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
சபையில் 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதாக மக்களவை சபாநாயகர் டத்தோ முகமட் அரிப் முகமட் யூசோப் கணக்கிட்டார்.
இதே போன்று, கடந்த அக்டோபர் 17-ஆம் தேதியன்று, வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.