கோலாலம்பூர்: இன வேறுபாடுகளின்றி நடக்கும் திருமணங்கள் உலகெங்கிலும் அதிகரித்து வரும் நிலையில், அதிகமான மலேசியர்கள் தங்கள் இனத்திற்கு வெளியே திருமணம் செய்துகொண்டுள்ளதாக புள்ளிவிவரம் காட்டுகிறது.
மலேசியாவின் திருமணம் மற்றும் விவாகரத்து புள்ளிவிவர அறிக்கையின்படி, கடந்த ஆண்டு மொத்த திருமணங்களில் 9 விழுக்காடு (206,253 திருமணங்களில் 18,509) வெவ்வேறு இனத்தவர்களை உள்ளடக்கியது என்று குறிப்பிட்டுள்ளது.
“2018-ஆம் ஆண்டில் 18,509 இனங்களுக்கிடையிலான திருமணங்களில் 48.3 விழுக்காடு முஸ்லிம் மதத்தவரைச் சார்ந்தது. 51.7 விழுக்காடு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இடையிலான திருமணங்கள்” என்று அந்த அறிக்கை நேற்று புதன்கிழமை கூறியது.
இது 2017-இல் பதிவு செய்யப்பட்ட 8 விழுக்காடு திருமணங்களிலிருந்து (203,741 திருமணங்களில் 16,238) அதிகமானதாகும்.
கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2012- 2016 வரை அமெரிக்காவில் இனங்களுக்கிடையேயான திருமணங்கள் 7.4 விழுக்காடு முதல் 10.2 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த திருமணங்களைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு 206,253 கலப்பு திருமணங்கள் நடந்துள்ளதாக தலைமை புள்ளிவிவர நிபுணர் டத்தோ டாக்டர் மொஹமட் உஜீர் மஹிதின் கூறினார். 2017-ஆம் ஆண்டில் 203,741-ஆக இருந்த இந்த எண்ணிக்கை 1.2 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் திருமணங்கள் 1.9 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், முஸ்லிம் அல்லாத திருமணங்கள் 0.5 விழுக்காடு குறைந்துவிட்டன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.