Home One Line P1 சாமிநாதனைத் தொடர்ந்து மற்றவர்களும் பிணையில் விடுதலையாவார்களா?

சாமிநாதனைத் தொடர்ந்து மற்றவர்களும் பிணையில் விடுதலையாவார்களா?

1121
0
SHARE
Ad

கோலாலம்பூர் – விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் 12 நபர்களில் முதலாவதாக காடெக் சட்டமன்ற உறுப்பினரும், மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினருமான ஜி.சாமிநாதனுக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் பிணை (ஜாமீன்) வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மற்ற 11 பேர்களும் விடுதலையாவார்களா என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் அவர்களின் குடும்பத்தினரிடையே ஏற்பட்டுள்ளது.

சாமிநாதனுக்கு பிணை வழங்கி அளித்த தீர்ப்பில், “சொஸ்மா சட்டத்தின் கீழ் பாதுகாப்புக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்க முடியாது எனக் கூறும் சட்டவிதி பிரிவு 13, நீதிநிர்வாகம், நாடாளுமன்றம், அரசாங்க நிர்வாகம் ஆகிய மூன்று அமைப்புகளும் தனித்தனியே பிரிந்து இயங்க வேண்டும் என்ற சட்டக் கோட்பாட்டுக்கு எதிரானதாகும். ஒருவருக்கு பிணை வழங்குவதா இல்லையா என்பது நீதிமன்றத்தின் உரிமையாகும். அதனைத் தடுக்கும் – அந்த உரிமையைப் பறிக்க முற்படும் – சட்டவிதி 13, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகும்” எனவும் நீதிபதி முகமட் நஸ்லான் கசாலி கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

சாமிநாதன் சார்பில் ராம்கர்ப்பால் சிங் வாதாடினார். அரசு தரப்பு சார்பில் முகமட் இஸ்கண்டார் அகமட் வாதாடினார்.

இன்றைய நீதிமன்ற அமர்வின் போது, நீதிமன்ற அரங்கில் நிறைந்திருந்த பார்வையாளர்கள் கூட்டத்தில் ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு, கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போயி தியோங், மலாக்கா துணை சபாநாயகர் வோங் போர்ட் பின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட சாமிநாதனின் பிணை விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் விசாரிக்க முடியும் என அனுமதி வழங்கப்பட்டு, அந்த விண்ணப்பம் மீதான வழக்கு கடந்த நவம்பர் 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் செவிமெடுத்த நீதிபதி நஸ்லான் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இன்றைய தீர்ப்பைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் மற்ற 11 பேர்களுக்கும் இதே சட்ட நியதி பொருந்தும் என்பதால், அவர்களுக்கும் அடுத்தடுத்து பிணை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.