சென்னை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்ட தமிழறிஞர் நெல்லை கண்ணனுக்கு வருகிற ஜனவரி 13-ஆம் தேதி வரையிலும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய போது, அமித் ஷா தான் மூளை என்றும் மோடி முட்டாள் என்றும் கூறிய நெல்லை கண்ணன், தொடர்ந்து அமித் ஷா ‘ஜோலியை’ முடித்து விட்டால், மோடியின் ‘ஜோலியும்’ முடிந்து விடும் என்று கூறினார். இவர்களின் ஜோலியை முடிக்க சாய்பு யாராவது வருவார்களா என்று பார்த்தால் இதுவரை யாரும் வரவில்லை என்றும் அந்தக் காணொளியில் நெல்லை கண்ணன் கூறியிருந்தார்.
அவரது உரைகள் காணொளி வடிவில் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அவர் மீது பாஜகவினர் அளித்த புகார்கள் அடிப்படையில் காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அதனை அடுத்து கடந்த புதன்கிழமை இரவு நெல்லை கண்ணனை காவல் துறையினர் கைது செய்தனர்.