கோலாலம்பூர்: ஒரு செய்தியைப் புகாரளிக்கும் ஊடகங்களுடன் உடன்படாவிட்டால் மிரட்டல், வன்முறை அல்லது சட்டத்திற்கு புறம்பாக செயல்பட வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த நினைவூட்டலை வழங்கிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, ஊடக அறிக்கையில் உடன்படவில்லை என்றால் வெவ்வேறு கருத்துக்களை சரிசெய்ய அல்லது வெளிப்படுத்த நிறைய வழிகள் உள்ளன என்றார்.
“ஊடகவியலாளர்களின் பணி உண்மைகளை அறிக்கையிடுவதேயாகும், இதனால் தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.”
“ஏதேனும் தவறு நடந்தால் காவல் துறை விசாரித்து தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டிவி 3 ஊடகவியலாளர் முகமட் இஷாக் அப்டில்லா ங்காவின் செய்தி அறிக்கை குறித்து கோபிந்த் கருத்து தெரிவித்திருந்தார்.
அடிப்படை மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் இல்லாமல் இயங்கும் திரெங்கானுவில் உள்ள டாருல் இமான் இஸ்லாமிய தொடக்கப்பள்ளி (எஸ்ஆர்ஐடிஐ) தொடர்பான தகவலின் காணொளியைத் தொடர்ந்து, அவருக்கு முகநூலில் மரண அச்சுறுத்தல்கள் வந்தன.
அதைத் தொடர்ந்து, கோலா திரெங்கானு மாவட்ட காவல் தலைமையகத்தில் முகமட் இஷாக்காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.