கோலாலம்பூர்: நாட்டை மீண்டும் பாதையில் கொண்டு செல்ல மக்கள் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு நேரம் கொடுக்க வேண்டும் என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், நாட்டின் செழிப்புக்காக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து செயல்படுமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் அனைத்து திட்டங்களையும் வாக்குறுதிகளையும் ஒரே இரவில் நிறைவேற்ற முடியும் என்றால் அது ஆச்சரியமான விசயம் என்று அவர் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம், ஒரு சாதாரணமான அரசாங்கத்திடமிருந்து நாட்டை மீட்கவில்லை என்று அவர் கூறினார்.
“நம்பிக்கைக் கூட்டணி சாதாரண அரசாங்கத்திடமிருந்து பொறுப்பேற்கவில்லை. பல ஆண்டுகளாக நாட்டை துஷ்பிரயோகம் செய்த, அதன் நிதிகளை சிதைத்த, அதன் நிர்வாகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்திய, அதன் சட்டங்களை மீறிய, காலதாமதமான கடன்களை அனுமதித்த, நாட்டை திவாலாக்கிய, மக்களைச் சுரண்டும் அரசாங்கத்திடமிருந்து அது பொறுப்பேற்றுள்ளது. ” என்று டாக்டர் மகாதீர் நேற்று வெள்ளிக்கிழமை தனது வலைப்பதிவில் தெரிவித்தார்.
இது தொடர்பாக, நம்பிக்கைக் கூட்டணி நிர்வாகம் எந்த திசையும் இல்லாத அரசு என்று கூறியவர்கள் யதார்த்தத்தை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
“எங்கள் இலக்குகளை நாங்கள் அறிவோம். வெளியாட்களுக்கு இது தெரியாது, ஆனால் எங்களுக்குத் தெரியும்.”
“முந்தைய அரசாங்கத்தைப் போல நாங்கள் இருக்கிறோமா? அல்லது அவர்கள் மக்களைச் சுரண்டும் அரசாங்கத்தை விரும்புகிறார்கள் என்று கூறுகிறார்களா?” என்று டாக்டர் மகாதீர் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களிடம் கேள்வி எழுப்பினார்.