நியூயார்க் – பல்லாண்டுகளாக உலகச் சந்தையில் பற்பசை என்றால் அது கோல்கேட் என்ற வணிக முத்திரை (பிராண்ட்) கொண்ட பற்பசைதான் என்பதுதான் நிலவரம். கடைகளில் கூட பற்பசை இருக்கிறதா எனக் கேட்பதற்குப் பதிலாக கோல்கேட் இருக்கிறதா என்றுதான் கேட்பார்கள்.
அந்த கோல்கேட் பற்பசைக்கு புதிய தோற்றத்தையும், நவீன சித்தாந்தங்களுக்கு ஏற்ற மாற்றங்களைக் கொண்டு வரவும் தயாராகி வருகிறது அதனைத் தயாரிக்கும் கோல்கேட் பாம்ஓலிவ் நிறுவனம்.
ஏற்கனவே, இந்தியா போன்ற நாடுகளில், சித்த வைத்திய முறைப்படியும், இந்திய பாரம்பரிய மூலிகைத் தாவரங்களின் சேர்க்கையுடனும் தனது பற்பசைகளை உற்பத்தி செய்துவரும் கோல்கேட், தற்போது முற்றிலும் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட சைவமயமான பற்பசையைத் தயாரிக்கப் போவதாகக் கூறியிருக்கிறது.
அத்துடன் பற்பசைத் தயாரிப்பு தொழில் துறையிலேயே முதன் முறையாக மறுசுழற்சி முறையிலான குழல்கவசத்தோடும் (டியூப்) கோல்கேட் தயாரிக்கப்படவுள்ளது.
ஐந்தாண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின்னர் இந்தப் புதிய கண்டுபிடிப்புகளை கோல்கேட் தயாரிப்பில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
தற்போது ஒருவகை நெகிழி (பிளாஸ்டிக்) மற்றும் அலுமினியம் கலவையில் பற்பசைகளுக்கான குழல் கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. இனி மறுசுழற்சி (Recycle) முறையில் கோல்கேட்டுக்கான குழல் கவசங்கள் தயாரிக்கப்படும்.
2025-ஆம் ஆண்டுக்குள் தனது உற்பத்திப் பொருட்கள் அத்தனையிலும் மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்தப்போவதாகவும் கோல்கேட் பாம்ஓலிவ் நிறுவனம் அறிவித்திருக்கிறது