புது டில்லி: நேற்று புதன்கிழமை டில்லியில் நடைபெற்ற இராணுவ வீரர்களுடனான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பத்து நாட்களில் இந்திய இராணுவம் பாகிஸ்தானை தோற்கடித்து விடும் என்று கூறியுள்ளார்.
இந்த கூற்று பரவலாக அனைத்து செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் இந்தியாவும், பாகிஸ்தானும் ஏற்கனவே 1947, 1965 மற்றும் 1971-இல் போரிட்டுள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த புல்வாமாத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
“பாகிஸ்தான் மூன்று முறை நம்முடன் நடத்திய போரில் தோல்வி அடைந்திருக்கிறது. பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்றால் நம்முடைய படைகளுக்கு ஏழு முதல் பத்து நாட்களுக்கு மேல் கால அவகாசம் தேவைப்படாது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தீவிரவாதிகளை தூண்டி விடுவதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மறைமுகப் போரை நடத்தி வருகிறது என்றும் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.