கோலாலம்பூர்: கொரொனாவைரஸ் குறித்து போலியான செய்திகளை பரப்பிய மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு பேரும் காவல்துறை மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத்தால் (எம்சிஎம்சி) தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டனர்.
மலாக்காவில் இரண்டு நடவடிக்கைகளின் மூலமாகவும், கெடா மற்றும் பகாங்கில் தலா ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டதாக எம்சிஎம்சி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
“அலோர் ஸ்டாரில், ஜனவரி 25-ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் கொரொனாவைரஸ் குறித்து போலி செய்திகளை பதிவேற்றிய சந்தேகத்தின் பேரில் 49 வயதான பகுதிநேர ஆசிரியர் நண்பகல் 12 மணிக்கு கைது செய்யப்பட்டார்.”
“ஜனவரி 26-ஆம் தேதியன்று முகநூலில் வெளியிடப்பட்ட போலி கொரொனாவைரஸ் உள்ளடக்கத்தை விசாரிக்க உதவுவதற்காக 25 மற்றும் 30 வயதுடைய இரண்டு மருந்தாளுநர்கள் மாலை 4 மணியளவில் மலாக்காவின் பெரிங்கிட் மற்றும் மெர்லிமாவில் தடுத்து வைக்கப்பட்டனர்” என்று அது நேற்று புதன்கிழமை தெரிவித்தது.
இதற்கிடையில், ஜனவரி 27-ஆம் தேதியன்று டுவிட்டரில் போலி கொரொனாவைரஸ் உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொண்டதாக 24 வயதான பொது உயர் கல்வி மாணவர் குவாந்தானில் மாலை 4.15 மணிக்கு கைது செய்யப்பட்டார்.
கொரொனாவைரஸ் தொடர்பான போலி உள்ளடக்கத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்ற பயன்படுத்தப்பட்ட நான்கு கைபேசிகள், ஐந்து செறிவட்டைகள் (சிம் கார்ட்) மற்றும் இரண்டு நினைவக அட்டைகள் (மெமரி கார்ட்), அவர்களிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சந்தேக நபர்களும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998-இன் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள். அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.