பெய்ஜிங்: சீனா முழுவதும் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 2,233-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 75,465 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய சுகாதார ஆணையத்தை மேற்கோள் காட்டி ஸ்பூட்னிக் செய்தி நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
54 பகுதிகளில் (மாவட்டங்கள் மற்றும் நகரங்கள்) 54,965 பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 11,633 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது. மேலும் 18,264 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 411 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரொனாவைரஸ் நோய்கள் பதிவானதாக சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 2,244 பேராக உயர்ந்துள்ளது. சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 2,233 பேர் இறந்துள்ள நிலையில், ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.