Home One Line P1 “தாய்மொழியைப் பேசுவதிலும் போற்றுவதிலும் பெருமை கொள்வோம்” – தாய்மொழி தின செய்தியில் வேதமூர்த்தி

“தாய்மொழியைப் பேசுவதிலும் போற்றுவதிலும் பெருமை கொள்வோம்” – தாய்மொழி தின செய்தியில் வேதமூர்த்தி

782
0
SHARE
Ad

புத்ராஜெயா – மலேசியக் குடிமக்கள் அனைவருக்கும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை சார்பில் ‘உலகத் தாய்மொழி நாள்’ வாழ்த்தை தெரிவித்துக் கொள்தாக தெரிவித்துள்ள பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் “உலகில் ஒருவர் எத்தனை மொழிகளைக் கற்றாலும் தன்னுடைய தாய்மொழியைப் போற்றுவதிலும் பேசுவதிலும்தான் பெருமை இருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“இன்றைய அவசர உலகில் இரு வாரங்களுக்கு ஒரு மொழி வீதம் அழிந்து வருவதாக யுனெஸ்கோ புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதனால்தான் அனைவருக்கும் தாய்மொழிமீது பற்றும் விழிப்புணர்வும் ஏற்படுவதற்காக பிப்ரவரி மாதம் 21-ஆம் நாளை உலக அளவில் தாய்மொழி தினமாக ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு 1999-இல் பிரகடனம் செய்ததுடன், அதை ஆண்டுதோறும் கொண்டாடியும் வருகிறது” என்றும் வேதமூர்த்தி கூறினார்.

#TamilSchoolmychoice

“2020-ஆம் ஆண்டு தாய்மொழி தினக் கருப்பொருளாக, வட்டார மொழிகளும் உலக நாடுகளின் எல்லையோர மொழிகளும் இணைந்து உலக அமைதிக்கும் பலதரப்பட்ட பண்பாட்டு மேன்மைக்கும் துணையாக விளங்க முடியும் என்று யுனெஸ்கோ மன்றம் அறிவித்துள்ளது. இதை, பல மொழி பேசும் மலேசிய மக்கள் கவனத்தில் கொள்வதுடன், தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றும் வேதமூர்த்தி தனது செய்தியில் கேட்டுக் கொண்டார்.

“மலேசிய மக்களிடம் தாய்மொழி குறித்த விழிப்புணர்வு இயல்பாகவே இருந்தாலும் அண்மைய ஆண்டுகளில் தாய்மொழி நாளைக் கொண்டாடி தங்களின் தாய்மொழிப் பற்றை அவர்கள் மேலும் வளர்த்து வருகின்றனர். இது பாராட்டிற்கு உரியது” எனவும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவருமான பொன்.வேதமூர்த்தி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.