‘மொழி நம் பண்பாட்டின் விழி’ – சரவணனின் தாய்மொழி தின வாழ்த்து

    313
    0
    SHARE
    Ad

    மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின்
    தாய்மொழி தின வாழ்த்துச் செய்தி

    மொழி நம் பண்பாட்டின் விழி
    மொழி இல்லாத வாழ்க்கை ஒளியில்லாத வாழ்க்கை

    மொழியின்றி சிந்தனையில்லை, சிந்தனையின்றி மனிதன் இல்லை. மனிதனது பிறப்பாலும்⸴ மரபாலும் பின்னிப் பிணைந்த ஒரு பிரிக்க முடியாத அங்கமே தாய்மொழி ஆகும்.

    தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா

    தாய்மொழிக்காக உயிரைக் கொடுத்துப் போராடியவர்கள் பலர் உள்ளனர். அவர்களின் தியாகம் இன்று வீணாகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலகில் பல்லாயிரம் மொழிகள் இருந்தாலும் ஒருவருக்கு அவரின் தாய்மொழி என்பது தாயை விடச் சிறந்தது என்கிறார் மகாகவி பாரதியார்.

    #TamilSchoolmychoice

    ஆனால் மாற்றாந் தோட்டத்து மல்லிகை மணக்கும் என்பதைப் போல நம்மில் பலருக்குத் தாய்மொழியை விட, பிற மொழிகளின் மேல்தான் மோகம் அதிகம். செம்மொழியான நம் தமிழ்மொழியின் பெருமைக்கு அளவே இல்லை. தொன்மை⸴ இனிமை⸴ எளிமை, வலிமை என பல சிறப்புகளைக் கொண்ட தமிழ் மொழியை அலட்சியப் படுத்துவதும், அனாவசியமாகக் கருதுவதும் நம் அறியாமையே.

    தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே
    தமிழைப் பழித்தவனை உன் தாயே தடுத்தாலும் விடாதே

    உயர்ந்த பொருட்களை இயற்கையே பாதுகாக்கும். எனவே தமிழ் தானாகத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். நம் மொழியின் பெருமையைத் தெரிந்து கொள்ள 1300 திருக்குறள்கள் போதும். இந்த மொழியை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது. ஆனால் நாம் அந்த கடமையிலிருந்து தவறி வருகிறோம். தமிழில் பெயர் வைப்பதில்லை, தமிழில் பேசுவதில்லை, தமிழ்ப் பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்புவதில்லை. ஆனாலும் நாம் தமிழர்கள்.

    மொழியின் ஆற்றல் சிந்தனைத் திறனை வளர்த்து, நாகரீகமான வாழ்க்கையை உருவாக்க உதவும். மனிதனது சிந்தனைத் திறனுக்கும் தாய்மொழிக்கும் தொடர்பு இருக்கிறது. தாய்மொழியில் ஒருவர் அதிகம் சிந்திக்க முடியும். சிறுவயது முதலே நம் பிள்ளைகளுக்கு நம் தாய்மொழியான தமிழ் மொழியின் சிறப்பையும், அதில் புதைந்து கிடக்கும் தமிழ் அறிஞர்களின் படைப்பையும் அறிமுகம் செய்ய வேண்டும்.
    தாய்மொழி தினத்தில், தாய்மொழியைப் போற்றுவோம். தமிழ்மொழியைக் காப்போம்.

    பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
    பாழ்பட நேர்ந்திடினும்
    கட்டி இழுத்து கால் கை முறிந்து
    அங்கம் பிளந்து இழந்து துடித்திடும்
    பொங்கு தமிழைப் பேச மறப்பேனோ..

    உலகத் தாய்மொழி தின நல்வாழ்த்துகள்

    வாழ்த்துகளுடன்
    டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்
    தப்பா நாடாளுமன்ற உறுப்பினர்
    ம.இ.கா தேசியத் துணைத் தலைவர்