புத்ரா ஜெயா : இன்று உலகத் தாய்மொழி தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் தருணத்தில் நம் நாட்டில் தாய்மொழி பள்ளிகளுக்கு எதிராக சில தரப்பினர் நீண்ட காலமாக நடத்தி வந்த நீதிமன்ற போராட்டமும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
தாய்மொழி பள்ளிகளில் சீனமும் தமிழும் கற்பிக்கப்படுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்ற கோரிக்கையை அடிப்படையாக வைத்து சில மலாய்-முஸ்லிம் பரப்பினர் தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான வழக்கை தொடுத்தனர்.
நம் நாட்டின் அரசியல் சாசனப்படி எல்லாப் பள்ளிகளிலும் மலாய் மொழியே கற்பிக்கப்படும் நிலையில் தாய்மொழிப் பள்ளிகளில் சீனமும் தமிழும் கற்பிக்கப்படுவதால் அந்த நடைமுறை மலேசிய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி இந்த வழக்கை அந்த மலாய்-முஸ்லிம் தரப்பினர் தொடுத்திருந்தனர்.
விசாரணை நடைபெற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வழக்கைத் தொடுத்தவர்கள் மேல் முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு நீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி செய்தது.
தாய்மொழிப் பள்ளிகள் இயங்குவதற்கு மலேசிய அரசியல் சாசனம் இடமளிக்கிறது என்று கூறி இந்த வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இதைத் தொடர்ந்து இறுதிக் கட்ட மேல்முறையீடாக, கூட்டரசு நீதிமன்றத்திற்கு வழக்கை தொகுத்தவர்கள் மேல் முறையீடு செய்தனர்.
கூட்டரசு நீதிமன்றத்தில் எல்லா வழக்குகளும் உடனடியாக மேல்முறையீட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
முதல் கட்டமாக இந்த வழக்கை விசாரிக்க போதிய முகாந்திரம் இருக்கிறதா? அடிப்படை காரணங்கள் இருக்கிறதா? என்பதை கூட்டரசு நீதிமன்றம் முதலில் நிர்ணயம் செய்யும். அதற்கு சாதகமாக பதில் இருந்தால்தான், அதன் பிறகு அந்த வழக்கை விசாரணைக்கு கூட்டரசு நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்.
அந்த அடிப்படையில் வழக்கைத் தொடுத்த தரப்பினர் கூட்டரசு நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர். அந்த விண்ணப்பம் நேற்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) விசாரணைக்கு வந்தபோது 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த விண்ணப்பத்தை விசாரித்து இந்த வழக்கை மேல்முறையீட்டுக்கு எடுத்துக் கொள்வதற்கு போதிய தகுதிகள் இல்லை எனக் கூறி அந்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து விட்டது.
3 நீதிபதிகள் கொண்ட அமர்வில், இரண்டு நீதிபதிகள், வழக்கை தொடுத்தவர்கள் போதிய முகாந்திரத்தை முன்வைக்கவில்லை எனக் கூறி மேல்முறையீட்டுக்கான அனுமதியை நிராகரித்திருக்கிறார்கள்.
ரோட்சாரியா பூஜாங், மேரி லிம் ஆகிய இருவரே வழக்கைத் தள்ளுபடி செய்த அந்த நீதிபதிகள். 3-வது நீதிபதியான அப்துல் கரிம் அப்துல் ஜலீல், நீதிபதிகளுக்கு உள்ள சீர்தூக்கி பார்க்கும் அதிகாரத்தின் அடிப்படையில் அவர்கள் முன் வைத்திருக்கும் விண்ணப்பத்தையும் கேள்விகளையும் கூட்டரசு நீதிமன்றம் விசாரித்து அதன் பின்னர் தீர்ப்பளிக்கலாம் என தெரிவித்தார். இந்த வழக்கின் அடிப்படை அம்சங்களை சட்ட ரீதியாக கூட்டரசு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என அவர் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நம் நாட்டில் தாய்மொழி பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்த விதத் தடையும் சட்டரீதியாக இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இந்த வழக்கை எதிர்த்து சீனப் பள்ளிகள் தொடர்பான இயக்கங்களும் தமிழ்ப் பள்ளிகள் தொடர்பான அரசு சாரா இயக்கங்களும் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தன. தங்களை பிரதிவாதிகளாகவும் இந்த வழக்கில் அவர்கள் இணைந்து கொண்டனர்.
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக மசீச, கெராக்கான், மஇகா போன்ற அரசியல் கட்சிகளும், தனியார் இடைநிலைப் பள்ளிகளும் இணைந்திருந்தன.