
கோலாலம்பூர்: ஜனநாயக குறியீட்டில் மலேசியா, 167 நாடுகளில் 43-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. முன்பைக் காட்டிலும் மலேசியா அதிக மதிப்பெண்களையும், சிறப்பான தரவரிசையையும் பதிவு செய்துள்ளது.
பொருளாதார புலனாய்வு பிரிவு (ஈஐயு) வெளியிட்டுள்ள 2019-ஆம் ஆண்டுக்கான ஜனநாயக குறியீட்டு அறிக்கையின்படி, மலேசியா 7.16 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து மலேசியா 5.98 முதல் 6.88 வரை மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 6.88 மதிப்பெண்களுடன் 52-வது இடத்தில் மலேசியா இடம் பெற்றது.
“ஆகஸ்ட் 2018-இல் ‘போலி செய்தி‘ சட்டத்தை இரத்து செய்த மலேசியா (அந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட பின்னர்) 2019-இல் ஜனநாயக் குறியீட்டில் அதிகபடியான புள்ளியைப் பதிவு செய்தது.”
“மதிப்பெண்கள் மேம்பட்டுள்ளன, எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளுக்கும், குறிப்பாக சமூக ஊடகங்களில் மேம்படுவதற்கான பிரச்சார வாய்ப்புகளுடன் மலேசியா உலகளவில் ஒன்பது படிகள் உயர்ந்துள்ளது” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
ஜனநாயகம் குறியீடு உலகில் ஜனநாயகத்தின் நிலையை அளவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தேர்தல் மற்றும் பன்மைவாதம், அரசாங்கத்தின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாச்சாரம் மற்றும் உள்நாட்டு உரிமைகள் ஆகிய ஐந்து பகுதிகளை அளவிடுகிறது.