சென்னை, ஏப்.9- சினிமா டைரக்டர் களஞ்சியம் இன்று எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று நடிகை அஞ்சலி மீது புகார் கொடுத்தார்.
அவர் மனுவில் கூறியிருப்பதாவது: நான் தமிழர் நலம் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறேன். ‘பூமணி’, ‘பூந்தோட்டம்’, ‘கிழக்கும் மேற்கும்’, ‘நிலவே முகம் காட்டு’, ‘கருங்காலி’ போன்ற படங்களை டைரக்டு செய்துள்ளேன். தமிழர் நலம் அமைப்பு மூலம் தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன்.
சமுதாயத்தில் எனக்கு நல்ல மதிப்பு உள்ளது. நடிகை அஞ்சலியை சத்தமில்லாமல் முத்தமிடு என்ற படத்தில் நான்தான் அறிமுகப்படுத்தினேன். பொருளாதார நெருக்கடியால் அப்படம் வெளிவரவில்லை. முதல் படத்தின் இயக்குனர் என்ற முறையில் அஞ்சலி குடும்பத்தினர் மீது எனக்கு பழக்கம் இருந்தது. குடும்ப நண்பராக சில ஆலோசனைகள் வழங்கியுள்ளேன். அஞ்சலியின் குடும்ப விவகாரங்களிலும் சொந்த பிரச்சினையிலும் நான் தலையிட்டது இல்லை.
அஞ்சலி நேற்று அளித்த பேட்டி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சம்பாதித்த பணத்தை நான் கையாடல் செய்து விட்டதாகவும் என்னால் அஞ்சலி உயிருக்கு ஆபத்து என்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். என்னை ஒரு அடியாள் போலவும் சித்தரித்து உள்ளார். இதனால் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது. மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளேன். அஞ்சலி குற்றச்சாட்டுகள் தவறானவை. எனவே அஞ்சலி மீதும் அவரை பின்னால் இருந்து தூண்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.