Home One Line P2 “மாஸ்டர்” இசை வெளியீட்டு விழா நேரலை – விஜய் பேசப்போகும் அரசியல் என்ன?

“மாஸ்டர்” இசை வெளியீட்டு விழா நேரலை – விஜய் பேசப்போகும் அரசியல் என்ன?

962
0
SHARE
Ad

சென்னை – நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் வெளியீட்டை விட அதிகம் எதிர்பார்க்கப்படுவது அவரது படத்தின் இசை வெளியீட்டு விழாக்கள். காரணம், கடந்த சில ஆண்டுகளாகவே அவரது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாக்கள், அவரது அரசியல் சிந்தனைகளை வெளிப்படுத்தும் மேடைகளாகவும் – அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் அதிரடி “பஞ்ச்” வசனங்களை உதிர்க்கும் களங்களாகவும் – இருந்து வந்திருக்கின்றன.

அதன்காரணமாக, உள்ளடக்கம் கண்டுபிடிப்பதற்கு கடுமையாகப் பாடுபடும் தமிழக ஊடகங்களுக்கு – குறிப்பாக தொலைக் காட்சி ஊடகங்களுக்கு – விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா என்பது – மென்று கொண்டிருக்கிற வெறும் வாய்க்கு இனிப்பான அல்வா கிடைத்த மாதிரி!

விஜய் பேசியதை முதல் நாள் ஒளிபரப்புவது – அவர் பேசிய அரசியல் கருத்துகளின் எதிரொலிகளைத் தேடிப் பிடித்துப் போடுவது – அதைத் தொடர்ந்த விவாதங்கள் – என அடுத்த சில நாட்களுக்கு தொலைக்காட்சி ஊடகங்களுக்கு உள்ளடக்கங்கள் என்பது அருவி மாதிரி கொட்டிக் கொண்டே இருக்கும்.

#TamilSchoolmychoice

வழக்கமான பிரம்மாண்ட மேடை, ஆயிரக்கணக்கான இரசிகர்கள் என்று இல்லாமல் – இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் ஒரு தங்கும் விடுதியில் மூடப்பட்ட மண்டபத்திற்குள் நடத்தப்படும் அளவுக்கு “மாஸ்டர்” இசை வெளியீட்டு விழா சுருங்கியதற்குக் காரணம், அரசியல் அல்ல – உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நச்சுயிரியான கொவிட் 19-தான் அதன் காரணம்!

எனினும், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி சன் தொலைக் காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாவதால், மலேசியாவிலும் அதனைப் பார்த்து மகிழலாம்.

மலேசிய நேரப்படி இன்று இரவு 9.00 மணிக்கு, அஸ்ட்ரோவின் சன் தொலைக் காட்சி அலைவரிசைகளில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேரலையாகக் கண்டு களிக்கலாம்.

தன்மீது வருமான வரி இலாகா தொடர்ந்த அதிரடி வேட்டைகள் – ரஜினியின் அரசியல் பிரவேசம் – அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களுக்குத் தயாராகி வரும் அரசியல் கட்சிகளின் மோதல்கள் – இவற்றுக்கு நடுவில் விஜய் என்ன சொல்லப் போகிறார் – அல்லது எதுவும் சொல்லாமல் நழுவி விடுவாரா – அல்லது ஊடகப் பசிக்குத் தக்க தீனியைப் போடுவாரா?

இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து வெளியிடப்படும் முன்னோட்டம் எப்படியிருக்கும்?

பரபரப்புடன் காத்திருக்கிறது தமிழக அரசியல் – திரைப்பட உலகம்!