![](https://selliyal.com/wp-content/uploads/2021/04/prasanth-kishore-22042021-e1619100914516.jpg)
சென்னை : இந்தியாவின் முன்னணி தேர்தல் வியூக விற்பன்னர் பிரசாந்த் கிஷோர். கடந்த 2021 தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் வியூக ஆலோசகராக அவரின் நிறுவனம் செயல்பட்டது. கோடிக்கணக்கில் அவருக்கும் கட்டணமாக அள்ளிக் கொடுக்கப்பட்டது. அந்த நகர்வு பல சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் இறுதியில் திமுகவுக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தார் பிரசாந்த் கிஷோர்.
அதன் பின்னர் தனது பூர்வீக மாநிலமான பீகாரின் ஜனமோர்ச்சா என்ற தன் சொந்தக் கட்சியை நிறுவி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மும்முரமாக ஆயத்தமாகி வருகிறார்.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை (பிப்ரவரி 10) பிரசாந்த் கிஷோர் நீலாங்கரையிலுள்ள விஜய் இல்லத்திற்கு நேரடியாக வந்து சந்தித்திருப்பது பல்வேறு ஆரூடங்களை எழுப்பியுள்ளது. இதன் மூலம் பிரசாந்த் கிஷோர் விஜய் கட்சிக்கு வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆலோசகராக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
பிரசாந்த் கிஷோரே நேரடியாக விஜய் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் சந்திப்பு நடத்தியிருப்பது தமிழ் நாடு அரசியலில் பரபரப்புகளை அதிகரித்துள்ளது.
அண்மையில் விஜய் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜூன் இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் என்றும் ஆரூடம் கூறப்படுகிறது.