சென்னை: தமிழ் நாட்டு அரசியலில் பொதுவாக ஓர் அரசியல் கட்சியிலிருந்து ஒருவரை நீக்கி விட்டால் அதன் பின்னர் நீக்கப்பட்டவர் அடுத்த சில நாட்களுக்கோ, வாரங்களுக்கோ முன்னாள் கட்சித் தலைவரை சரமாரியாகத் திட்டித் தீர்ப்பார். அந்தக் கட்சியைப் பற்றியும் அல்லது தன்னை விலக்கிய தலைவரைப் பற்றியும் தகாத சொற்களால் சாடுவார்.
ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜூன் நேற்று வெள்ளிக்கிழமை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
அடுத்து அவர் செய்ததுதான் ஆச்சரியம். உடனடியாக அவர் தேடிச் சென்றது தொல்.திருமாவளவனை! திருமாவைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி, அவரின் நல்லாசிகளையும் பெற்றார் ஆதவ். விசிகவிலிருந்து தான் நீக்கப்படுவதற்கு காரணமாக அம்பேத்கார் பற்றிய நூலையும் திருமாவுக்கு அன்பளிப்பு செய்தார்.
தமிழ் நாட்டு அரசியல் பார்வையாளர்கள் ஆச்சரியத்துடன் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதவ்-திருமாவின் அரசியல் பண்பு இதற்கான காரணமா? அல்லது வேறு ஏதாவது உள்குத்து இருக்கிறதா? எதிர்காலத்தில் கூட்டணியாக இணையலாம் என்பதால் அதற்கு முன்கூட்டியே இருவரும் அச்சாரம் போடுகிறார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்றன.