Home One Line P1 கொவிட் 19 – பிரதமரின் முக்கிய அறிவிப்புகள்

கொவிட் 19 – பிரதமரின் முக்கிய அறிவிப்புகள்

2057
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – கொவிட் 19 பாதிப்புகள் தொடர்பில் இன்று திங்கட்கிழமை இரவு தொலைக் காட்சி வழி நேரலையாக மலேசிய மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் முக்கிய சில அரசாங்க முடிவுகளை அறிவித்தார்.

பிரதமரின் அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • மக்களின் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், மையங்கள் திறந்திருக்கும் என்பதால் மக்கள் பதட்டமடைய வேண்டியதில்லை. பொருட்களை அனாவசியமாக வாங்கி சேமித்து வைக்க வேண்டியதில்லை என்றும் மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • மக்கள் கூடும் அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும், கலாச்சார, சமூக, மத நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
  • வணிக மையங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். பேரங்காடிகள், சந்தைகள், பலசரக்குக் கடைகள், அங்காடிக் கடைகள் அனைத்தும் எப்போதும் போல் திறந்திருக்கும்.
  • மலேசியர்கள் அடுத்த 14 நாட்களுக்கு வெளிநாடுகள் செல்வதற்குத் தடைவிதிக்கப்படுகிறது.
  • வெளிநாடுகளில் இருந்து வரும் மலேசியர்கள் சுகாதாரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்பதோடு, 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்.
  • மலேசியாவுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
  • பள்ளிக் கூடங்கள், கல்வி மையங்கள் நடவடிக்கைகள் இடைக்காலமாக ஒத்தி வைக்கப்படுகின்றன.
  • எல்லா உயர்நிலைப் பல்கலைக் கழகங்களும், கைத்திறன் பயிற்சி மையங்களும் மூடப்படும்.
  • எல்லா அரசாங்க, தனியார் நிறுவன அலுவலக இடங்கள் மூடப்பட வேண்டும். அத்தியாவசிய சேவைகளான தண்ணீர் விநியோகம், போக்குவரத்து, கடல் போக்குவரத்து, எரிவாயு, எண்ணெய், ஒலி-ஒளிபரப்புகள், நிதி சேவைகள், வங்கி சேவைகள், சுகாதார சேவைகள், மருந்து விற்பனை மையங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், சிறைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு, தற்காப்பு, தூய்மைப்படுத்தும் பணிகள், உணவு விநியோகம் ஆகியவை தொடர்ந்து வழக்கம்போல் இயங்கி வரும்.
  • இந்த நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்றாலும் கொவிட் 19 பாதிப்புகள் பரவாமல் இருக்கவும், மதிப்புமிக்க உயிர்களைக் காப்பாற்றவும் இந்த நடவடிக்கைகள் அவசியமாகிறது.
  • மேற்குறிப்பிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர, மற்ற அரசு சேவைகளும், தனியார் பணிகளும் வீட்டிலிருந்தே மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
  • பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு மையங்கள், திரை அரங்குகள், கேளிக்கை மையங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். அத்துடன் அவை கிருமிகளை ஒழிக்கும் வண்ணம் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.
  • எல்லா பொது போக்குவரத்து சேவைகளும் இயங்கி வரும் என்பதோடு, அவற்றின் மீதான தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.