கோலாலம்பூர், ஜன.24- சபாவில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை குறித்து பேசப்பட்டு வரும் இவ்வேளையில், துன் மகாதீர் அவர்கள் சுதந்திரத்திற்கு முன் 10 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது குறித்து விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று 20க்கும் மேற்பட்ட அரசு சார்பற்ற இயக்கங்கள் கண்டன கூட்டம் ஒன்றை தலைநகர் பிரிக்பீல்ட்சில் நடத்தினர்.
தங்களின் ரத்தத்தை வேர்வையாக சிந்தி உழைத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கியதை விசாரிக்க வேண்டும் என்று மகாதீரின் பேச்சு மிகவும் வருத்தமளிக்கிறது என்று மலேசிய இந்திய முற்போக்குச் சங்கத்தின் தலைவர் ராஜரத்தினம் கூறினார்.
மகாதீரின் மூதாதையார் எங்கிருந்து வந்தனர் என்றும், அவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமைக் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றார்.
மகாதீரின் ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை பற்றி கேள்வி எழுப்பினால் அவர் பிரச்சினையை திசை திருப்பி அனைவரின் மனதையும் புண்படுத்துவதாக அ.சிவநேசன் கூறினார். மகாதீர் அவ்வாறு பேசி இருப்பதற்கு காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
வர்கா அமானின் தலைவர் பாரதிதாசன் உள்ளிட்ட பல அரசு சார்பற்ற இயக்கங்கள் இந்த கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டனர்.