சென்னை, ஜன. 24 -தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொள்ளு பேத்தியும், மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழி பேத்தியும், தொழில் அதிபர் சி.கே. ரங்கநாதன்- தேன்மொழி ஆகியோரின் மகளுமான அமுதவல்லிக்கும் தென் சென்னை போலீஸ் முன்னாள் இணை கமிஷனரும் திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி.யுமான சண்முக ராஜேஸ்வரன்-சுமதி ஆகியோரின் மகன் சித்தார்த்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
நேற்று காலையில் ஈஞ்சம்பாக்கம் பாரதி அவென்வில் உள்ள கவின் சோலையில் திருமணம் நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் மணமக்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர். பின்னர் மணமக்களை வாழ்த்தி கருணாநிதி பேசினார். திருமணத்தில் கருணாநிதி குடும்பத்தினர் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கேற்றனர்.
மணமக்களை வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:-
கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மத்திய அமைச்சர் மு.க.அழகரி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி எம்.பி., மு.க. தமிழரசு, செல்வி, முரசொலி செல்வம், அமிர்தம், கலாநிதி மாறன், காவேரி தயாநிதிமாறன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, பூங்கோதை, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், நடிகர் விக்ரம் மற்றும் பலர் வந்திருந்தனர்.
திருமணத்துக்கு வந்த அனைவரையும் மு.க.முத்து, போலீஸ் அதிகாரி சண்முக ராஜேஸ்வரன், தொழில் அதிபர் சி.கே. ரங்கநாதன், செல்வி ஆகியோர் முன்னின்று வரவேற்றனர்.