மொஹாலி,ஜன.24-இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 ஒரு நாள் ஆட்டம் கொண்ட இத்தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 257 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த இந்திய அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
மொஹாலியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணித் தரப்பில் தொடக்க வீரர் ரஹானேவுக்குப் பதிலாக ரோஹித் சர்மா களமிறக்கப்பட்டார். அதேபோல் இங்கிலாந்து அணியில் கிரேக் கீஸ்வெட்டருக்குப் பதிலாக ஜோஸ் பட்லர் சேர்க்கப்பட்டார்.
கேப்டன் குக்கும், இயான் பெல்லும் இங்கிலாந்து அணியின் இன்னிங்ûஸத் தொடங்கினர். 10 ரன்கள் எடுத்திருந்தபோது பெல் ஆட்டமிழந்தார். பின்னர் பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்தார் குக். இந்த ஜோடி பொறுமையாக ஆடி ரன்களைச் சேர்ந்தது. இதனால் அணியின் ஸ்கோர் நிதானமாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய இருவரும் அரை சதத்தைக் கடந்தனர்.
இந்தியத் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிறப்பாக விளையாடிய சர்மா 73 பந்துகளில் அரை சதமடித்தார். அணியின் ஸ்கோர் 158 ஆக உயர்ந்தபோது 83 ரன்கள் எடுத்திருந்த சர்மா ஆட்டமிழந்தார். 93 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். முன்னதாக, 12 ரன்கள் எடுத்திருந்தபோது, சர்மா கொடுத்த கேட்சை கோட்டை விட்டார் பீட்டர்சன்.
ஆட்டநாயகன்: இறுதிவரை போராடி அணியை வெற்றி பெற வைத்த சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி: இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியதன் மூலம் அணி மற்றும் கேப்டன் தோனியின் மீதான விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. இப்போது அதற்கு இந்திய அணி தக்க பதிலடி அளித்துள்ளது.
இந்த வெற்றி குறித்து தோனி கூறுகையில், “அனைத்து வீரர்களும் சிறப்பாகச் செயல்பட்டனர். ரோஹித் சர்மா, ரெய்னா ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது. ரோஹித்தின் ஆட்டம் வியக்க வைக்கும் வகையில் இருந்தது. அவர், அணிக்கு கிடைத்த பொக்கிஷம். இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பீல்டிங் சிறப்பாக இருந்தது’ என்று தெரிவித்தார்.