Home கலை உலகம் ஆஸ்ட்ரோ “நக்கீரன்” : சிறப்பான ஆவணப் படத்தில் சில வரலாற்றுப் பிழைகள்

ஆஸ்ட்ரோ “நக்கீரன்” : சிறப்பான ஆவணப் படத்தில் சில வரலாற்றுப் பிழைகள்

890
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை (ஜூன் 6) முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் துல்லிய ஒளிபரப்பில் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கின்றது “நக்கீரன்” என்ற புதிய  ஆவணத் தொடர்.

தொடக்கமே சிறப்பாக இருக்கின்றது.

அந்த நிகழ்ச்சி குறித்து ஆஸ்ட்ரோ தகவல் குறிப்பேடு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அதன்படி மலேசிய இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை பட்டியலிட்டு அலசப் போகின்றார்கள் என்பது தெரிகிறது. அவ்வாறு பட்டியலிடப்பட்ட அம்சங்களை கவனித்துப் பார்த்தால் உண்மையிலேயே இன்றைக்கு இந்திய சமுதாயத்தை ஊடுருவி ஆட்டிப்படைக்கும் பல விஷயங்கள் அதில் அடங்கியிருக்கின்றன. அவை குறித்த ஆரோக்கிய விவாதங்களை இந்த நிகழ்ச்சியின் வழி கையாளப் போகிறார்கள் என்பது இன்றைய காலத்துக்கு தேவையான ஒன்று.

முதல் நிகழ்ச்சியிலேயே சர்ச்சைக்குரிய தமிழ்ப் பள்ளிகள் மீதான விவகாரங்களை விவாதங்களாகத் தொடக்கியிருக்கிறார்கள்.

முதல் நிகழ்ச்சியைப் பார்க்கும்போதே இந்த நிகழ்ச்சி மிக சிறப்பாக அமையும், மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரிகிறது. கண்டிப்பாக சில சிந்தனை மாற்றங்களை அதன் விவாதங்கள் விதைக்கும் என நம்பலாம்.

வெறும் பொழுதுபோக்கு அம்சங்களும், திரைப்படங்களும் மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை உருவாக்கியதற்கு ஆஸ்ட்ரோவுக்குப் பாராட்டுகள்.

அதே சமயம் “நக்கீரன்” நிகழ்ச்சியில் பகிரப்பட்ட தகவல்களில் சில முரண்பாடுகள், தவறான செய்திகள், வரலாற்றுப் பிழைகள் அடங்கியிருக்கின்றன.

அவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டியதும் நமது கடமையாகும். அந்தத் தவறுகள் மீண்டும் இடம் பெறாமல் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே நமது நோக்கம்.

இந்துக்களா? இந்தியர்களா?

முதல் நிகழ்ச்சியில் தொடக்கத்திலேயே “நாம் யார்? இந்தியர்கள்!” எனத் தொகுப்பாளர் கூறுகிறார்.

உலகிலேயே மூன்றாவது பெரிய பிரிவினர் இந்துக்கள்தான் என்ற புள்ளிவிவரத்தையும் காட்டுகிறார்.

இந்துக்கள் வேறு, இந்தியர்கள் வேறு!

அதிலும் குறிப்பாக மலேசியாவில் இந்தியர்களில் கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், ஏன் முஸ்லீம்கள் கூட அடங்கியிருக்கின்றனர்.

எனவே, இந்தியர்களை இந்துக்கள் என்ற கட்டுக்குள் அடக்குவது தவறு! இந்தியர்களில் பெரும்பான்மை மதத்தினர் இந்துக்கள் என்பதே சரியான அணுகுமுறையாகும்.

உலக இந்துக்களின் விழுக்காடு எவ்வளவு?

அடுத்ததாக இந்துக்களின் புள்ளிவிவரத்தைக் காட்ட மேற்காணும் வரைபடத்தைக் காட்டியிருக்கிறார்கள். இந்துக்கள் உலகிலேயே மூன்றாவது பெரிய மதப் பிரிவாகத் திகழ்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.

விழுக்காடு ரீதியான புள்ளிவிவரங்கள் காட்டப்படும்போது மொத்தத்தையும் கூட்டினால் நூறு விழுக்காடு வரவேண்டும்.

அல்லது, அதற்கும் சற்று குறைவாக இருக்க வேண்டும்! மேற்காணும் விழுக்காடுகளைக் கூட்டினால் எவ்வளவு வருகிறது என்பதை வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

இணையத் தகவல் களஞ்சியமான விக்கிபீடியா உலக மதங்களை, கீழ்க்காணும் விழுக்காடு ரீதியாகப் பிரித்திருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

எனவே ஒவ்வொரு மதத்திற்கும் எத்தனை விழுக்காட்டினர் பின்பற்றுகிறார்கள் என நிகழ்ச்சியில் காட்டப்பட்டிருப்பது ஒரு தவறான தகவலாகும்.

200 ஆண்டுகளாகத்தான் தமிழ் மொழி நம் நாட்டில் இருக்கிறதா?

இரண்டாவது தவறான தகவல், தமிழ்மொழி இந்த நாட்டில் 200 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கிறது என்பதாகும்.

தமிழ் மொழியை ஒரு பாடமாகப் பள்ளிகளில் கற்பிக்கும் அம்சம்தான் 200 ஆண்டுகளை கடந்து இன்றும் தொடரப்படுகிறது. தவிர தமிழ் மொழிக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தொடர்பு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.

தமிழ் மொழிக்கும் நமது நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு கடாரம் வென்ற இராஜேந்திர சோழனில் தொடங்கி, மலாக்கா சாம்ராஜ்யம் வரை வரலாற்று ஏடுகளில் பின்னிப் பிணைந்திருக்கிறது.

இன்றும் மலாக்காவில் வாழும் மலாக்கா செட்டிகள் நமது தமிழ் மொழிப் பயன்பாட்டின் வரலாற்றுச் சின்னங்களாவர். 15-ஆம், 16-ஆம் நூற்றாண்டுகளில் மலாக்கா சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் தொடங்குகிறது அந்தத் தமிழர்களின் வருகை. அதாவது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால்!

எனவே, தமிழ் மொழி பள்ளிகளில் கற்பிக்கப்படத் தொடங்கியதுதான் 200 ஆண்டுகளுக்கு முன்னரே தவிர, தமிழ் மொழியின் பயன்பாடு அல்ல!

மலாய் மொழி எப்போது பள்ளிகளில் கற்பிக்கப்பட்டது?

பகிரப்பட்ட இன்னொரு தகவல், 1960ஆம் ஆண்டுகளில் தான் (அதாவது 63 ஆண்டுகளுக்கு முன்னர்தான்) மலேசியாவில் தேசிய மொழிப் பள்ளிகள் உருவாக்கம் பெற்றன, ஆனால் தமிழ் 200 ஆண்டுகளுக்கு முன்பே கற்பிக்கப்பட்டது என்பதாகும். இதுவும் ஒரு தவறான கண்ணோட்டம்.

ஆவணங்களின்படி பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஜோகூர், மலாக்கா மாநிலங்களில் முதன்முதலில் 1821-ஆம் ஆண்டிலேயே மலாய் மொழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

மலாய் மொழியில் தேர்ச்சி பெற்றால்தான் அரசாங்க வேலை கிடைக்கும் என்ற நிபந்தனையையும் பிரிட்டிஷ் அரசாங்கமும் அப்போதே உருவாக்கி வைத்திருந்தது. கீழ்க்காணும் ஆங்கிலக் குறிப்பு மூலம் இந்தத் தகவல்களை அறிந்து கொள்ளலாம் :

In education, the Malay language of Melaka-Johor was regarded as the standard language and became the medium of instruction in schools during colonial era. Starting from 1821, Malay-medium Schools were established by the British colonial government in Penang, Melaka and Singapore. These were followed by many others in Malay states of the peninsular. This development generated the writings of text books for schools, in addition to the publication of reference materials such as Malay dictionaries and grammar books. Apart from that, an important position was given towards the use of Malay in British administration, which requires every public servant in service to pass the special examination in Malay language as a condition for a confirmed post, as gazetted in Straits Government Gazette 1859.

இந்தியர்கள் பேசும் மொழியில் சமஸ்கிருதம் ஒன்றா?

நிகழ்ச்சியில் இந்தியர்கள்/இந்துக்கள் பேசும் மொழிகளின் பட்டியலைக் குறிப்பிட்ட தொகுப்பாளர், அதில் மற்ற இந்திய மொழிகளோடு சமஸ்கிருதம் என்பதையும் சேர்த்துக் கொண்டுள்ளார்.

சமஸ்கிருதம் இன்றைய நிலையில் எந்த சமூகத்திலும் பேச்சு வழக்கு மொழியாக பயன்படுத்தப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக மலேசியாவில் அறவே இல்லை.

இந்துக்களின் சம்பிராதய சடங்குகளிலும், ஆலயங்களிலும் சமஸ்கிருத மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றனவே தவிர, சமஸ்கிருதம் எந்த சமூகத்திலும் பேச்சு வழக்கு மொழியாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

“நக்கீரன்” சிறந்த உள்ளடக்க அம்சங்களோடு, நல்ல நோக்கத்தோடு தொடங்கப்பட்டிருக்கிறது.

அதில் இதுபோன்ற வரலாற்று, தகவல் பிழைகளைத் தவிர்ப்பது நிகழ்ச்சியை மேலும் சிறப்பானதாக்கும்!

-இரா.முத்தரசன்