Home One Line P1 பெர்சாத்து கட்சியைக் கைப்பற்ற நீதிமன்றப் போராட்டம் தொடங்கினார் மகாதீர்

பெர்சாத்து கட்சியைக் கைப்பற்ற நீதிமன்றப் போராட்டம் தொடங்கினார் மகாதீர்

673
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சியைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர துன் மகாதீர் சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். அவரும் அவரது மகன் முக்ரிஸ் மகாதீரும், மேலும் ஐவரும் இணைந்து இந்த சட்டப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக அவர்கள் அனைவரும் பெர்சாத்து கட்சியின் உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து இந்த சட்டப் போராட்டம் தொடரப்பட்டுள்ளது.

நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கில் பிரதமர் மொகிதின் யாசின், சங்கப் பதிவு இலாகாவையும் பிரதிவாதிகளாக மகாதீர் பெயர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மகாதீர், முக்ரிஸ் மகாதீரோடு இணைந்து வழக்கு தொடுக்கும் மேலும் நால்வர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான், டாக்டர் மஸ்லீ மாலிக், டத்தோ மர்சுகி யாஹ்யா, டத்தோ அமிருடின் ஹம்சா,  ஆகியோராவர். பெர்சாத்து கட்சியும் வாதியாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வழக்கின் பிரதிவாதிகளாக பெர்சாத்து கட்சித் தலைவர் மொகிதின் யாசின், கட்சியின் நிர்வாக செயலாளர் முகமட் சுகைமி யாஹ்யா, தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின், சங்கப் பதிவகத்தின் தலைமை இயக்குநர் மஸ்யாத்தி அபாங் இப்ராகிம் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.

இந்த வழக்கு ஹானிப் காத்ரி வழக்கறிஞர் நிறுவனம் மூலம் தொடுக்கப்பட்டிருக்கின்றது.

தாங்கள் இன்னும் பெர்சாத்து கட்சியின் அதிகாரபூர்வ உறுப்பினர்கள் என்றும் தீர்ப்பு வழங்கக் கோரி மகாதீர் தரப்பினர் இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர். மேலும் மகாதீர் கடந்த பெர்சாத்து கட்சித் தேர்தலில் ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என அறிவிக்கக் கோரியும் இந்த வழக்கின் வழி அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அதேபோன்று தான் இன்னும் கட்சியில் உறுப்பினர் என்றும் இன்னும் பெர்சாத்து  கட்சியின் துணைத்தலைவர் என்றும் எதிர்வரும் கட்சித் தேர்தலில் போட்டியிடத் தகுதி உள்ளவர் என்றும் முக்ரிஸ் மகாதீர் வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சைட் சாதிக், தான் இன்னும் கட்சியின் உறுப்பினர் என்றும் தனது இளைஞர் பகுதி தலைவர் பதவியில் தொடர்வதாகவும் இதே வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே 28 தேதியிட்ட கடிதத்தின் வழி தாங்கள் தங்களின் உறுப்பியம் செல்லாது என வழங்கப்பட்ட கடிதத்தை இரத்து செய்ய கோரியும் மகாதீர் தரப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த முடிவை உறுதி செய்யும் வண்ணம் ஜூன் 4-ஆம் தேதி நடந்த உச்சமன்ற கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரியும் அவர்கள் இந்த வழக்கின்வழி முடிவு செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றும் மகாதீர்-மொகிதின் போராட்டம் தற்போது நீதிமன்றத்தை மையமாகக் கொண்டு உக்கிரமான அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.