Home அரசியல் அம்னோ பிரச்சாரத்திற்கு கவர்ச்சி சேர்க்கப் போகும் உம்மி அபில்டா!

அம்னோ பிரச்சாரத்திற்கு கவர்ச்சி சேர்க்கப் போகும் உம்மி அபில்டா!

525
0
SHARE
Ad

Ummi-Hafilda-Featureஏப்ரல் 12 1999ஆம் ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிற்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் பரபரப்புடன் நடந்து கொண்டிருந்த கால கட்டம்!

#TamilSchoolmychoice

அன்வாருக்கு எதிராக சாட்சி சொல்ல வந்த ஒரு கவர்ச்சிகரமான, இளமையான உம்மி அபில்டா என்ற மலாய்ப் பெண்மணி, நீதிமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களால் புகைப்படக் கருவிகளோடு அடிக்கடி சூழப்படும் காட்சிப் பொருளாக உலா வந்ததை பலர் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள்.

பிகேஆர் கட்சியின் இன்றைய துணைத் தலைவரும் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸ்மின் அலியின் சகோதரிதான் உம்மி அபில்டா.

அன்வார் துணைப் பிரதமராக இருந்த காலத்தில் அன்வாருக்கு செயலாளராகப் பணியாற்றிய அஸ்மின் அலி அன்வாருக்குப் பின்னால், ஒரு தூணைப் போன்று துணிந்து  நின்று போராட்டங்களில் ஈடுபட இன்னொரு புறத்தில் அவரது சொந்த தங்கையே அன்வாருக்கு எதிராகச் சாட்சி சொன்ன அரசியல் திருவிளையாடல்கள் அப்போது அரங்கேறின.

அந்த உம்மி அபில்டா அதன் பின் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் – அன்வாருக்கு எதிராக பல புகார்களையும், பத்திரிக்கை அறிக்கைகளையும் வெளியிட்டார்.

அந்த உம்மி அபில்டா இந்த பொதுத் தேர்தலில் அம்னோவுக்கு ஆதரவாக பிரச்சாரக் களத்தில் இறங்கியுள்ளார்.

அன்வார் பிரதமராக வரக் கூடாதாம்

நேற்றிரவு அம்னோவினால் பினாங்கு பாலிக் புலாவ் வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுமார் 200 பேர் கலந்து கொண்ட கூட்டமொன்றில் இரண்டரை மணி நேரம் உரையாற்றிய உம்மி அபில்டா, அன்வார் ஒரு யூத பிரதிநிதி (ஏஜெண்ட்), ஏமாற்றுக்காரர், நாட்டிற்கு எதிராக செயல்படும் துரோகி, ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுபவர் என்றெல்லாம் தான் காட்டப் போவதாக பேசினார் என மலேசியகினி இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அன்வாரின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என்றும் உம்மி அபில்டா கூறியுள்ளார்.

இரவு 12.30 மணிவரை நீடித்த கூட்டத்தில் உரையாற்றிய உம்மி அபில்டா அன்வாரின் அரசியல் வாழ்க்கையைத் தான் ஒரு முடிவுக்கு கொண்டுவரப் போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அன்வாரின் துணைவியாரும் பிகேஆரின் தலைவியுமான வான் அசிசாவுக்கும் அன்வாரின் முறைகேடான நடவடிக்கைகள் தெரியும் என்றும் ஆனால் அவர் அமைதியாக இருக்கின்றார் என்றும் உம்மி அபில்டா குற்றம் சாட்டியுள்ளார்.

அதேபோன்று தனது சகோதரர் அஸ்மின் அலியின் அரசியல் வாழ்வையும் தான் முடித்துக் கட்டப் போவதாகவும், தேசிய முன்னணி விரும்பினால் அஸ்மின் அலியை எதிர்த்து எந்த தொகுதியில் வேண்டுமானாலும் தான் நிற்கத் தயார் என்றும் உம்மி கூறினார்.

தனது குடும்பத்தினர் அனைவரும் தனது பக்கம் இருக்கின்றனர் என்றும் இந்த முறை அஸ்மின் அலி எங்கு நின்றாலும் தேர்தலில் தோல்வியைத் தழுவுவார் என்றும் உம்மி அந்த கூட்டத்தில் உரையாற்றியபோது கூறியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலிலும் உம்மி அபில்டா இதே போன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இருப்பினும் அவரது “கிளுகிளுப்பான” உரையைக் கேட்க் கூட்டம் கூடியதே தவிர, அதனால் வாக்குகள் எதுவும் அன்வாருக்கு எதிராக விழுந்ததாகத் தெரியவில்லை.

அவரது சகோதரர் அஸ்மின் அலியும் கடந்த பொதுத் தேர்தலில் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியிலும், சிலாங்கூரின் புக்கிட் அந்தாரா பங்சா சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றிபெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.