சென்னை, ஏப்ரல் 13- நடிகை அஞ்சலியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக காவல் துறையினர் பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அஞ்சலியின் சித்தி எஸ்.பாரதி தேவி மனு தாக்கல் செய்துள்ளார். எனது தங்கை பார்வதி தேவியின் மகள் அஞ்சலியை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். இயக்குநர் களஞ்சியம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமான அஞ்சலி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
ஹைதராபாதில் நடைபெறும் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக எனது கணவருடன் மார்ச் 31ஆம் தேதி ஹைதராபாத்துக்கு அஞ்சலி சென்றார். அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த அஞ்சலியை ஏப்ரல் 8ஆம் தேதி முதல் காணவில்லை.
காணாமல்போன அஞ்சலியைக் கண்டுபிடித்து தருமாறு காவல் துறையினரிடம் புகார் மனு அளித்தேன். எனினும் இதுவரை அவரைக் கண்டுபிடிக்கவில்லை. ஆகவே, அஞ்சலியைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் பாரதி தேவி கோரியுள்ளார்.