Home அரசியல் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவதால் சுங்கை சிப்புட்டில் மைக்கல் ஜெயகுமாருக்கு வெற்றி வாய்ப்பு!

பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவதால் சுங்கை சிப்புட்டில் மைக்கல் ஜெயகுமாருக்கு வெற்றி வாய்ப்பு!

823
0
SHARE
Ad

Michael Jeyakumarகோலாலம்பூர், ஏப்ரல்- 16 – மக்கள் கூட்டணியும் அதன் நட்புக் கட்சியுமான  மலேசிய சோஸலிஸ்ட் கட்சியும் (பிஎஸ்எம்) தங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை ஒரளவு தீர்த்துக் கொண்டு தற்போது மக்கள் கூட்டணி கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட சோஷலிஸ்ட் கட்சி முன்வந்துள்ளதால் சுங்கை சிப்புட்டில் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் மீண்டும் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.

இருப்பினும் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் மக்கள் கூட்டணி தலைமைத்துவத்திற்கும் சோஷலிஸ்ட் கட்சிக்கும் இடையில் சமரசம் ஏற்படவில்லை.

இதனால் செமினி தொகுதியில் மும்முனைப் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

2008 நிலைமை வேறு; இன்றைய நிலைமை வேறு!

2008ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது பிஎஸ்எம் கட்சிக்கு அரசியல் கட்சியாக பதிவு கிடைக்கவில்லை.

எனவே, அப்போது பிஎஸ்எம் பிகேஆர் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது. சுங்கை சிப்புட் தொகுதியில் டாக்டர் மைக்கல் ஜெயக்குமாரும், கோத்தா டமானசாராவில்  கட்சித்தலைவர் முகமட் நசிர் ஹிஷாமும் வெற்றி பெற, செமினியில் கட்சியின் தலைமைச்செயலாளர் அருட்செல்வம் தோல்விகண்டார்.

இந்த 13வது பொதுத்தேர்தலில் சோஸலிஸ்ட் கட்சிக்கு அதன் ‘கை’ சின்னம் பதிவு கிடைத்துவிட்டதால், அது தனது சொந்த சின்னத்தில் போட்டியிடவிரும்புவது இப்போது இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், தொடர்ந்த பேச்சுவார்த்தைக்குப் பின் மக்கள் கூட்டணி சின்னங்களில் போட்டியிட பிஎஸ்எம் கட்சி முன்வந்துள்ளது.

சுங்கைசிப்புட்டில் ஜெயகுமாரின் நிலை என்ன?

கடந்தமுறை 2008 பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட டாக்டர் ஜெயக்குமார் ம இ கா வின் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவை சுங்கைசிப்புட்டில் தோற்கடித்தார்.

ஆனால் இம்முறை மக்கள் கூட்டணி, பிஎஸ்எம் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சுங்கை சிப்புட்டில் மும்முனைப் போட்டி உருவாகும் நிலைமையும், அதனால் மீண்டும் இந்த தொகுதியை ம.இ.கா கைப்பற்றும் வாய்ப்பு ஏற்படலாம் என்றும் கருதப்பட்டது.

அன்வாரின் தர்மசங்கடம்  

திர்கட்சித்தலைவர் அன்வாரைப் பொறுத்தவரை சோஸலிஸ்ட் கட்சி மக்கள் கூட்டணியின் எந்த சின்னத்தில்  போட்டியிட்டாலும் அவருக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் பொதுவுடமைக் கொள்கையுடைய அக்கட்சியை கூட்டணியில் சேர்த்துக்கொள்வதில் மட்டுமே அவருக்கு சங்கடம் இருந்தது.

ஆகவே சோஸலிஸ்ட் கட்சி இவ்விஷயத்தில் விவேகமான முடிவை தற்போது எடுத்திருக்கின்றது.

தங்களின் பொது எதிரியான தேசிய முன்னணியை வீழ்த்த எதிர்க் கட்சிகள் தங்களுக்குள் சமரசம் செய்து கொண்டு, தங்களின் கொள்கைகளைக் கொஞ்சம் விட்டுக் கொடுப்பதுதான் 13வது பொதுத் தேர்தலில் அவர்கள் எடுக்கும் சிறப்பான முடிவாக இருக்கும்.

அந்த வகையில் பிகேஆர் சின்னத்தில் மீண்டும் சுங்கை சிப்புட்டில் போட்டியிடவிருக்கும், மைக்கல் ஜெயகுமாரின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமடைந்துள்ளது.