Home One Line P1 கொவிட்19: ஒரு மாதத்தில் மலேசியாவில் முதல் மரணம்

கொவிட்19: ஒரு மாதத்தில் மலேசியாவில் முதல் மரணம்

887
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மலேசிய சுகாதார அமைச்சு இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) அந்த அறிவிப்பை வெளியிட்டது.

அதே வேளையில் கடந்த ஒரு மாத இடைவெளியில் முதன் முறையாக ஒரு மரணம் பதிவாகியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,334 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் முற்றிலும் குணமடைந்து இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,048 ஆகும்.

#TamilSchoolmychoice

மரணமடைந்த நபர் 75 வயதான கெடாவைச் சேர்ந்தவராவார். அண்மையக் காலங்களில் கெடா மாநிலம் சில புதிய தொற்றுத் திரள்களின் பாதிப்பைக் கண்டுள்ளது. சிவகங்கா, தாவார், சாலா ஆகிய தொற்றுத் திரள்கள் கெடாவில் உருவானவையாகும்.

மரணமடைந்த நபருக்கு ஏற்கனவே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் இருந்ததாக இன்று வெளியிட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.

வெளிநாட்டுக்குச் சென்றிருந்த அந்த நபர் நாடு திரும்பிய பின் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் இருமல், மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளை எதிர்நோக்கினார்.

இதற்கு முன்பு ஜூலை 29-ஆம் தேதிதான் கொவிட்-19 மரணம் மலேசியாவில் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 126 ஆக உயர்ந்திருக்கிறது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 17 சம்பவங்களில் 2 பேர் மட்டுமே உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களில் 15 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டது. இவர்களில் பெரும்பாலோர் இந்தியாவிலிருந்து திரும்பியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வெளிநாட்டுத் தொற்று கண்ட 15 பேர்களில் 12 பேர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களாவர். எஞ்சிய மூவரில் இருவர் சவுதி அரேபியாவிலிருந்தும், ஒருவர் ஜப்பானிலிருந்தும் நாடு திரும்பியவர்களாவர்.

கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நாட்டில் மொத்தம் 160 பேர் இன்னும் மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புகளுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 7 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 5 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.