சென்னை, ஏப்ரல் 18- ஆபரணத் தங்கத்தின் விலை, முன்எப்போதும் இல்லாத வகையில் குறைந்து வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 552 குறைந்துள்ளது.
சென்னை மார்க்கெட்டில் திங்கள்கிழமை ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 72-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) பவுனுக்கு மேலும் ரூ.544 குறைந்து ரூ.19 ஆயிரத்து 528-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் சரிவு நடுத்தர வர்க்க மக்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சள் உலோகம் என அழைக்கப்படும் தங்கம், இந்திய மக்களின் வாழ்க்கையோடும், கலாசாரத்தோடும் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது.
1000 டன் இறக்குமதி: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 200 லிருந்து 250 டன் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், தற்போது ஆண்டுக்கு 1000 டன் வரை இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
நம் நாட்டில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம்தான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு இந்திய மக்கள் தங்கத்தின் மீது பெருமளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சில நாள்களாக சர்வதேச பொருளாதாரத்தில் நிலவி வரும் மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. அமெரிக்க பொருளாதாரம் முன்னேற்றமடைந்து வருவதால் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து, பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீட்டின் அளவு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச பொருளாதாரத்தில் பங்கு வகிக்கும் பெரு நிறுவனங்கள் மற்றும் நாடுகள் தங்களிடம் இருப்பில் உள்ள தங்கத்தை விற்பதாக சில நாள்களுக்கு முன்பு அறிவித்ததன் காரணமாக தங்கத்தின் விலையில் மிகப்பெரிய சரிவு காணப்பட்டு வருகிறது.
2011 அக்டோபரில் ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 424 ஆக இருந்தது. அதன் பின்னர் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனை அதிகரிப்பு: விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து தங்க ஆபரணங்கள் வாங்க மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. கடந்த 2 நாள்களில் மட்டும் தங்க விற்பனை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இந்த வாரத்தில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன் காரணமாக ஆபரண விற்பனை 50 சதவீதமாக உயரும் என நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.