சென்னை, ஜனவரி 26 – அனவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக, மூத்த திரைப்படப் பாடகி எஸ்.ஜானகி (படம்), இந்திய மத்திய அரசு இந்த ஆண்டு தனக்கு வழங்கியுள்ள பத்ம பூஷன் விருதை ஏற்க மறுத்துள்ளார்.
இந்த விருது தனக்கு மிகவும் தாமதமாக வந்துள்ளதாகவும், தென்னிந்தியர்களை விட வட இந்தியர்களுக்கே இந்த விருதுகளில் அதிக முன்னுரிமை வழங்கப்படுவதாலும் தான் இந்த விருதைப் புறக்கணிப்பதாக ஜானகி கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் ஜானகியின் குரலை அறிந்திருக்காதவர்கள் இருக்கமாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு பல தலைமுறையைச் சேர்ந்தவர்களையும் கவர்ந்திழுத்த திரைப்படப் பாடகி எஸ் ஜானகி ஆவார்.
1957ஆம் ஆண்டு தொடங்கி 55 வருடங்களாய் ஜானகி திரைப்படங்களில் பாடிவருகின்றார்.
தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் உட்பட்ட தென்னிந்திய மொழிகளில் பெரும்பான்மையாகவும் ஹிந்தி உட்பட வேறு பல மொழிகளிலுமாக பதினையாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் இவர் பாடியுள்ளார்.
குடியரசு தினத்துக்கு முன்பாக இவ்வாண்டின் ‘பத்ம’ விருதுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பத்ம பூஷன் விருது தனக்கு வழங்கப்படவிருப்பதை அறிந்த ஜானகி, இந்த விருதைத் தான் ஏற்க மறுப்பதாக அறிவித்திருக்கிறார்.
இந்திய அரசின் விருதுகளுக்காக நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது வட இந்தியர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், தென்னிந்தியர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் ஜானகி கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு மொழிகளிலும் ரசிகர்கள் தனக்கு வழங்கிய அங்கீகாரமே பெரிய விருது என்றும் ஜானகி கூறியுள்ளார்.
இந்த விருது தனது தாய்க்கு மிகவும் தாமதமாக வந்துள்ளது என்று ஜானகியின் மகன் முரளிகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.