கோலாலம்பூர், ஜனவரி 26 – கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஹிண்ட்ராப் இயக்கம் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த இயக்கத்தின் மீதான தடை கடந்த வெள்ளிக்கிழமை 25ஆம் தேதி முதல் நீக்கப்படுகின்றது என உள்துறை அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளது அநேகரின் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது.
தொடர்ந்து இந்தியர்களின் போர்க் குரலாக ஒலித்து வரும் ஹிண்ட்ராப் இயக்கம், கடந்த வருடம் அதன் தலைவர் பி.வேதமூர்த்தி பிரிட்டனிலிருந்து திரும்பியதும், அதன் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன.
பாக்காத்தான் ராயாட், தேசிய முன்னணி என இரண்டு அரசியல் கூட்டணிகளுடன் பேச்சு நடத்த தயார் என ஹிண்ட்ராப் அறிவித்து அதன்படி பாக்காத்தான் ராயாட் தலைவர்கள் சிலருடன் பேச்சுவார்த்தையும் நடந்தது.
ஆனால், தேசிய முன்னணியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதென்றால் முதலில் ஹிண்ட்ராப் மீதிலான தடையை தேசிய முன்னணி அரசாங்கம் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஹிண்ட்ராப் முன் வைத்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது ஹிண்ட்ராப் மீதான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனால் ஹிண்ட்ராப் இயக்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு கதவுகளைத் திறந்து விடுவதற்கான முதல் கட்டம்தான் இந்த தடை நீக்கம் என்று தெரிகின்றது.
பாக்காத்தான் ராயாட் ஹிண்ட்ராப் மீது பாராமுகம் காட்டி வருவதால், ஹிண்ட்ராப் தனது பார்வையை தேசிய முன்னணியை நோக்கி செலுத்தும் நிலைமை வரலாம்.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய சமுதாயத்தை முன்னேற்றுவதற்கான ஒரு செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஹிண்ட்ராப் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்பவர்களோடு அரசியல் கூட்டணி என்றும் அறிவித்திருந்தது.
அவ்வாறு ஹிண்ட்ராப் தேசிய முன்னணியுடன் அரசியல் ரீதியாக கைகோர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம்!
தற்போது, அம்பிகா சீனிவாசன், பவானி, சபா அடையாள அட்டை விவகாரம் போன்ற விவகாரங்களால் இந்தியர்கள் மத்தியில் பெருமளவில் ஆதரவை இழந்து நிற்கும் தேசிய முன்னணி இந்தியர்களின் ஆதரவை மீண்டும் பெறுவதற்கு ஒரு வியூகமாக, அதிரடியாக, அரசியல் லாபம் கருதி ஹிண்ட்ராப் இயக்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சுமுகமான அரசியல் ரீதியிலான தீர்வு காண்பதற்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
-இரா.முத்தரசன்