கோலாலம்பூர் : நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) முன்னாள் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு ஆதரவாக, கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் ஹிண்ட்ராப் இயக்கத்தினர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நேரடியாக ரொக்கமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகையை வழங்கினர். அந்தத் தொகை பின்னர் இராமசாமியிடம் நேரில் வழங்கப்பட்டது.
ஹிண்ட்ராப் சார்பில் அதன் தலைவர் பொன்.வேதமூர்த்தி நடத்திய இந்த ஆதரவுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
“இராமசாமிக்கும் தனக்கும் இடையில் கடந்த காலங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன என்பது உண்மைதான். ஆனால் சமுதாயத்திற்கான போராட்டம் என்று வரும்போது இராமசாமியை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்” என வேதமூர்த்தி சூளுரைத்தார்.
சமுதாய நலன்களுக்காக நாங்கள் யாருடனும் இணைந்து போராடத் தயார் என்றும் வேதமூர்த்தி அறிவித்தார்.
தனக்கு எதிரான அவதூறு வழக்கில் ஏற்பட்ட ‘ஒரு தோல்வியை’ தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஓர் அநீதியாகக் கருதி இந்திய சமுதாயமே ஒன்று திரண்டு தனக்கு ஆதரவாக நிற்பதைக் கண்டும் – சாதாரண தொழிலாளர்கள் முதல் பல ஏழை இந்தியக் குடும்பங்கள் கூட ஐந்து ரிங்கிட், பத்து ரிங்கிட் என தனது நீதிமன்றத் தீர்ப்புக்கு ஆதரவாக வாரி வழங்கி வருவதைப் பார்க்கும்போதும் உணர்ச்சி வசப்படுகிறேன் – நெகிழ்ச்சியடைகிறேன் – என இதே கூட்டத்தில் உரையாற்றியபோது இராமசாமி கூறினார்.
இதற்கிடையில் இராமசாமிக்கு ஆதரவாகத் திரட்டப்படும் நிதியில் 1,308,643-65 ரிங்கிட் இதுவரை சேர்ந்துள்ளது.
அவருக்கு எதிராக நீதிமன்றம் விதித்துள்ள இழப்பீட்டுத் தொகையை அடைய இன்னும் சுமார் 120 ஆயிரம் ரிங்கிட் மட்டுமே தேவைப்படுகிறது.