Home நாடு சாகிர் நாயக் விவகாரம் – இராமசாமிக்கு ஆதரவாக இந்திய சமூகத்தின் ஆதரவு திரள்கிறது

சாகிர் நாயக் விவகாரம் – இராமசாமிக்கு ஆதரவாக இந்திய சமூகத்தின் ஆதரவு திரள்கிறது

586
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தனியார் மதபோதகர் டாக்டர் சாகிர் நாயக்கிற்கு முன்னாள் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி 1,520,000-00 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இராமசாமிக்கு ஆதரவாக இந்திய சமூகத்தின் அனைத்துத் தரப்புகளில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.

அவ்வளவு பெரிய தொகையை தன்னால் திரட்ட முடியாது என தன் முகநூல் பக்கத்தின் வழி பகிரங்கமாக அறிவித்தார் இராமசாமி. இழப்பீட்டுத் தொகை தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இழப்பீட்டுத் தொகையை இராமசாமி அடுத்த 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து தமிழர் குரல் இயக்கம் இராமசாமிக்கு ஆதரவாக இழப்பீட்டுத் தொகைக்கான நிதியைத் திரட்டும் முயற்சியைத் தொடங்கியது.

அந்த முயற்சிக்கு பலதரப்பட்ட அமைப்புகள் ஆதரவு தந்து வருகின்றன.

முன்னாள் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் இயங்கும் ஹிண்ட்ராப் இயக்கம் இராமசாமிக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இதற்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) மாலை 5.00 மணி வரையில் இராமசாமிக்கு ஆதரவாக 236,091 ரிங்கிட் திரட்டப்பட்டிருப்பதாக அவரின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சாகிர் நாயக் தொடர்ந்த அவதூறு வழக்கு

சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் இராமசாமிக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில், இராமசாமி 1,520,000 ரிங்கிட்  இழப்பீடாக வழங்க வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 2) தீர்ப்பளித்தது.

சாகிர் நாயக் இராமசாமி மீது 2 வழக்குகளைத் தொடுத்திருந்தார். முதலாவது வழக்கு அக்டோபர் 2019-ஆம் ஆண்டிலும், இரண்டாவது வழக்கு அதே ஆண்டில் டிசம்பர் மாதத்திலும் இராமசாமி மீது தொடுக்கப்பட்டது.

இரண்டு வழக்குகளிலும் இராமசாமி மேற்குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஹாயாதுல் அக்மால் அப்துல் அசிஸ் தீர்ப்பளித்தார்.