கோலாலம்பூர் : தனக்கு அவதூறு வழக்கில் ஏற்பட்ட ‘ஒரு தோல்வியை’ தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஓர் அநீதியாகக் கருதி இந்திய சமுதாயமே ஒன்று திரண்டு தனக்கு ஆதரவாக நிற்பதைக் கண்டும் – சாதாரண தொழிலாளர்கள் முதல் பல ஏழை இந்தியக் குடும்பங்கள் கூட ஐந்து ரிங்கிட், பத்து ரிங்கிட் என தனது நீதிமன்றத் தீர்ப்புக்கு ஆதரவாக வாரி வழங்கி வருவதைப் பார்க்கும்போதும் உணர்ச்சி வசப்படுகிறேன் – நெகிழ்ச்சியடைகிறேன் – என பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கூறினார்.
இன்று, செவ்வாய்க்கிழமை தனக்கு (நவம்பர் 7) ஆதரவாக கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் ஹிண்ட்ராப் இயக்கத்தினர் சார்பில் அதன் தலைவர் பொன்.வேதமூர்த்தி நடத்திய ஆதரவுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே இராமசாமி மேற்கண்டவாறு கூறினார்.
தனக்கு எதிராக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறேன் என்றும் கூறிய இராமசாமி அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் கவனித்து வருகிறார்கள் என்றும் கூறினார்.
எதிர்வரும் டிசம்பர் 1-ஆம் தேதி தனது வழக்கின் மேல்முறையீடு செவிமெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதற்கு முன்பாக நீதிமன்றம் தீர்ப்பின்படியான இழப்பீட்டுத் தொகையை செலுத்துவதற்கு தயாராக வைத்திருந்தால் மேல்முறையீட்டு வழக்குக்கு சாதகமாக இருக்கும் என்ற நோக்கத்திலேயே இந்த நிதி திரட்டப்படுகிறது என்றும் இராமசாமி தெரிவித்தார்.
அப்படியே வழக்கில் வெற்றி பெற்றாலும், இந்த நிதி இந்திய சமுதாயத்திற்கு பயனான முறையில் செலவிடப்படும் என்றும் இன்றையக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.