Home Video கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி – நாயகன் – 2 உருவாகிறதா?

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி – நாயகன் – 2 உருவாகிறதா?

668
0
SHARE
Ad

சென்னை : மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் கேஎச் 234 எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் குறு முன்னோட்டம் நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 6) கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டு இரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒரு கேங்க்ஸ்டரின் கதை என்ற முத்திரையோடு வெளிவந்திருக்கும் இந்த முன்னோட்டத்தில் கமல் தன் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் எனக் கூறுகிறார்.

36 ஆண்டுகளுக்கு முன்னர் மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான நாயகன் படத்திலும் கமல் கதாபாத்திரத்தின் பெயர் சக்திவேல் என்பதுதான். மற்ற கதாபாத்திரங்கள் அவரை வேலு நாயக்கர் என அழைக்கும் வண்ணம் காட்சிகள் நாயகன் படத்தில் இடம் பெற்றிருந்தன.

#TamilSchoolmychoice

நாயகன் படத்தின் இறுதிக் காட்சியில் கமல்ஹாசனின் பேரனின் பெயரும் சக்திவேல் எனக் காட்டப்படும். எனவே, அவரின் பேரனின் கதையா இது என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.

இப்போது மீண்டும் அதே சாயல் கொண்ட பெயர் புதிய படத்தில் கமலுக்கு சூட்டப்பட்டிருப்பதால் இந்தப் படம் நாயகன் படத்தின் தொடர்ச்சியா – இரண்டாம் பாகமா – என்பது போன்ற சுவாரசிய விவாதங்கள் சமூக ஊடகங்களில் எழுந்துள்ளன.

திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு பணிகளைக் கவனிக்கிறார்.

கமல் படமான தேவர் மகன் படம் சாதியப் பெயர்களால் இன்றும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்நிலையில் புதிய படத்திற்கும் நாயக்கர் என்னும் சாதிப் பெயர் சூட்டப்பட்டிருப்பதும் சர்ச்சைகளைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு ஆயுதங்களுடன் வரும் வில்லன்களோடு கமல் மோதும் காட்சிகளைக் கொண்ட மணிரத்னம் படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: