கோலாலம்பூர் : ஓரிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு புதிய காவல் துறைத் தலைவர் நியமனம் பெறுகிறார் – பழையவர் பதவி விலகிச் செல்கிறார். ஆனால் ஆண்டுகள் கடந்து கொண்டிருந்தாலும் சர்ச்சைக்குரிய இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா டிக்சாவை எந்த ஐஜிபியாலும் கண்டு பிடிக்க முடியாததுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
அதற்காக ஒவ்வொரு காவல் துறைத் தலைவரும் தரும் விளக்கமாக வித்தியாசமாக இருக்கிறது.
இந்த முறை எதிர்வரும் மே 3-ஆம் தேதியோடு பதவி விலகிச் செல்லும் ஐஜிபி அப்துல் ஹாமிட் பாடோரும் இந்திரா காந்தியின் மகளைக் கண்டு பிடிக்க முடியாததற்கு ஒரு புதிய விளக்கத்தைத் தந்திருக்கிறார்.
அதாவது சில அரசு சாரா இயக்கங்கள் தலையிட்டதால்தான் தன்னால் பிரசன்னா டிக்சாவைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது என விளக்கம் தந்திருக்கிறார் ஹாமிட் பாடோர்.
காவல் துறை விசாரணையில் தலையிட வேண்டாம் என இந்திரா காந்திக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும் ஹாமிட் பாடோர் கூறியிருக்கிறார்.
ஹாமிட் பாடோர் விளக்கத்துக்கு இங்காட் எதிர்ப்பு
ஹாமிட் பாடோர் தந்திருக்கும் விளக்கத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது இங்காட் என்ற அரசு சாரா இயக்கம்.
“இந்திரா காந்தி, காவல் துறை விசாரணையில் தலையிட மாட்டேன் என்ற தனது வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. ஒரு அரசு சாரா இயக்கம் அவரின் சார்பாக விசாரணையில் தலையிட்டது. சம்பந்தப்பட்ட நபர் (இந்திரா காந்தியின் முன்னாள் கணவர்) வெளிநாட்டில் இருப்பதால் தூதரக அணுகுமுறைகள் மூலமே இந்த விவகாரத்தை நாங்கள் கையாள வேண்டியதிருந்தது. அரசு சாரா இயக்கம் தலையிடாமல் இருந்திருந்தால் கடந்த ஆண்டு நாங்கள் இந்திரா காந்தியின் மகளைக் கண்டுபிடித்துக் கொண்டு வரும் பணியில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருப்போம்” என ஹாமிட் பாடோர் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
தனது தோல்விகளுக்காக ஹாமிட் பாடோர் மற்றவர்களைக் குறை சொல்லக் கூடாது என இங்காட் தலைவர் அருண் துரைசாமி (படம்) பதிலடி கொடுத்திருக்கிறார்.
இங்காட் என்பது (The Indira Gandhi Action Team – Ingat) இந்திரா காந்தி நடவடிக்கைக் குழு என்ற பெயரில் அவரின் மகளைக் கண்டுபிடித்து மீட்க அமைக்கப்பட்ட அரசு சாரா இயக்கமாகும்.
“ஐஜிபிக்கு அவர் கூறிய எல்லா வாக்குறுதிகளையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இருதரப்பும் வெற்றியடைவதற்கான நிலைமை இருக்கிறது, மகிழ்ச்சியான முடிவு வரும், இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் எங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும், நான் ஒரு மூத்த அரசியல்வாதியின் உதவியை நாடியிருக்கிறேன், இந்த வழக்கு விவகாரத்தில் எனக்குத் தனிப்பட்ட ஆர்வம் இருக்கிறது, என்றெல்லாம் கூறியவர் இதே ஐஜிபிதான் என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இவையெல்லாம் இனிப்பு கலந்த வார்த்தைகள். அவரின் உடைந்து போன வாக்குறுதிகள்” என அருண் துரைசாமி கூறியிருக்கிறார்.
“அவரின் தோல்விக்கு இங்காட்டைக் குறை சொல்லக் கூடாது. அவரே பொறுப்பு ஏற்கவேண்டும்” என்றும் கூறிய அருண் துரைசாமி இந்திரா காந்தியைக் கண்டுபிடித்து மீட்கும் பொறுப்பை இங்காட் இயக்கமே மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.