Home இந்தியா நரேந்திர மோடி அமைச்சரவை மாற்றம்! புதியவர்கள் பதவியேற்கின்றனர்!

நரேந்திர மோடி அமைச்சரவை மாற்றம்! புதியவர்கள் பதவியேற்கின்றனர்!

759
0
SHARE
Ad

புதுடில்லி : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2019-இல் மீண்டும் பிரதமராக, இரண்டாவது தவணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது புதிய அமைச்சரவையை அமைத்தார்.

அதற்குப் பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் எந்தவித முக்கிய அமைச்சரவை மாற்றத்தையும் அவர் மேற்கொள்ளவில்லை. இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 6) தனது அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்களோடு சந்திப்பு நடத்தியபின்னர் புதிய அமைச்சர்களைத் தேர்வு செய்திருக்கிறார் என்றும் அவர்கள் நாளை புதன்கிழமை மாலை (இந்திய நேரப்படி) 5.30 அதிபர் மாளிகையில் பதவியேற்கவிருக்கின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை இன்று மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து விரிவாக்கப்படும் இந்திய அமைச்சரவையில் மற்ற கூட்டணிக் கட்சிகளும் இணைத்துக் கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அடுத்தாண்டு இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. அதற்கும் தயாராகும் பொருட்டும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டும் மோடி அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

மாநிலக் கட்சிகளை வலுப்படுத்தும் வண்ணம் அவற்றின் பிரதிநிதிகளை பாஜக மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டை, திமுக கைப்பற்றியதைத் தொடர்ந்து, அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிமுக தரப்பில் தமிழ் நாட்டில் வலுத்து வருகின்றன.

இதன் மூலம், திமுகவுக்கு எதிராக அதிமுகவின் வலிமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என நரேந்திர மோடி-அமித் ஷா இருவரும் வியூகம் வகுத்துள்ளனர் என்றும் அதிமுக அமைச்சர் ஒருவரை நியமிப்பதன் மூலம் திமுகவின் செல்வாக்கையும் கட்டுக்குள் வைக்க முடியும் எனவும் அவர்கள் கருதுகின்றனர் என்றும் ஆரூடங்கள் கூறப்படுகின்றன.

அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான ரவீந்திர நாத் ஆவார். அதிமுக சார்பில் ஒருவருக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டால் இவருக்கே அந்த அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.