Home நாடு மலாக்கா: நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 4 : அசஹான் – கட்சி மாறிய இட்ரிஸ்...

மலாக்கா: நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 4 : அசஹான் – கட்சி மாறிய இட்ரிஸ் ஹருண் வெல்வாரா?

539
0
SHARE
Ad

(நாளை சனிக்கிழமை (நவம்பர் 20) பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் அசஹான் தொகுதியில் போட்டியிடுகிறார் மலாக்காவின் முன்னாள் மந்திரி பெசார் இட்ரிஸ் ஹாருண். அம்னோவிலிருந்து கட்சி மாறி பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளராகப் போட்டியிடும் அவரை வாக்காளர்கள் மீண்டும் ஏற்றுக் கொள்வார்களா? இதே தொகுதியில் போட்டியிடும் கெராக்கான்-தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தனேஷ் பாசில் வெற்றி வாய்ப்புகள் எப்படி? விவாதிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசியர் இரா.முத்தரசன்)

மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பரபரப்பான இன்னொரு நட்சத்திரத் தொகுதியாகப் பார்க்கப்படுவது அசஹான் சட்டமன்றம். அலோர்காஜா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் 5 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று அசஹான் தொகுதி.

இங்கு ஆறு முனைப் போட்டி நிலவுகிறது.

#TamilSchoolmychoice

அம்னோ தேசிய முன்னணி சார்பில் பைஃருல் நிஸாம் ரோஸ்லான் போட்டியிடுகிறார். பெரிக்காத்தான் நேஷனல் -கெராக்கான் கட்சி சார்பில் தனேஷ் பாசில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

இவர்களைவிட முக்கிய முகமாகப் பார்க்கப்படுபவர் இந்தத் தேர்தலில் போட்டியிடும் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண். அசஹான் தொகுதியில் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளராக அவரும் களமிறங்கி இருப்பதால்தான் அனைவரின் பார்வையும் இந்தத் தொகுதியின் மீது பாய்ந்திருக்கிறது.

இந்த மலாக்கா சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறுவதற்கான மூலக் காரணமாக இருந்த நால்வரில் ஒருவர் இட்ரிஸ் ஹருண்.  இட்ரிஸ் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் நடப்பு மாநில அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக்கொண்டதன் காரணமாகவே
சுலைமான் முகமட் அலியை முதலமைச்சராகக் கொண்ட கூட்டணி அரசாங்கம் மலாக்காவில் கவிழ்ந்தது.

மலாக்காவில் அம்னோவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் இட்ரிஸ் ஹருண். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், துணை அமைச்சர் என பல பதவிகளை அம்னோவின் மூலம் வகித்த இட்ரிஸ் ஹருண் 2013 முதல் 2018 வரை மலாக்கா முதலமைச்சராக பதவி வகித்தவர்.

மலாக்கா அரசாங்கம் கவிழக் காரணமாக இருந்த இட்ரிஸ் ஹாருண்

2018-இல் மலாக்கா மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கைப்பற்றியது. இருந்தாலும், அந்தத் தேர்தலில் தனது சுங்கை ஊடாங் சட்டமன்றத் தொகுதியை 2,229 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி-அம்னோ வேட்பாளராக வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டார் இட்ரிஸ் ஹருண்.

இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மேலும் மூவருடன் இணைந்து ஆளும் மாநில அரசாங்கத்திற்கான ஆதரவை அவர் மீட்டுக் கொண்டதை அடுத்து மலாக்கா மாநில அரசாங்கம் கவிழ்ந்தது.

அம்னோவும் இட்ரிஸ் ஹருணை கட்சியிலிருந்து நீக்கியது.
அவர் கட்சி மாறிய துரோகி என வர்ணித்த ஜசெக அவரையும் மற்ற மூவரையும் பக்காத்தான் ஹராப்பான் ஏற்றுக் கொள்ளாது என அறிவித்தது. இருந்தாலும், அன்வார் இப்ராகிமின் சமரசப் போக்கு காரணமாக ஜசெக பணிந்தது.
இவ்வாண்டு நவம்பர் 6-ஆம் தேதி பிகேஆர் கட்சியில் இட்ரிஸ் ஹருண் இணைந்தார்.

அதைத் தொடர்ந்து அவர் அசஹான் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். அம்னோவிலிருந்து கட்சி மாறிய அவரை, வாக்காளர்கள் தண்டிப்பார்களா – அல்லது அவரின் கடந்த கால சேவைகளுக்காக – அவர் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் என்பதற்காக – அவரை ஏற்றுக் கொள்வார்களா – என்ற கேள்விக்கு விடை நவம்பர் 20-ஆம் தேதிதான் நமக்குக் கிடைக்கும்.

இட்ரிஸ் ஹருணோடு மோதும் தனேஷ் பாசில்

அசஹான் தொகுதி 2008-ஆம் ஆண்டு வரை ம.இ.கா. தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட தொகுதி. 2008 பொதுத் தேர்தலில் ம.இ.கா. அந்தத் தொகுதியில் தோல்வி அடைந்தது.

அடுத்து வந்த 2013 பொதுத் தேர்தலில் ம.இ.கா. வுக்கு காடேக் தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் ம.இ.கா.வின் வேட்பாளர் எம்.எஸ். மகாதேவன் வெற்றி பெற்றார்.

2018 பொதுத் தேர்தலில் காடேக் தொகுதியை ஜசெகவின் ஜி. சாமிநாதனிடம் பறிகொடுத்தது ம.இ.கா. இந்த முறையும் காடேக் தொகுதியில் ம.இ.கா. போட்டியிடுகிறது.

அசஹான் தொகுதியில் கெராக்கான் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய வேட்பாளர் தனேஷ் பாசில்.

இதன் காரணமாகவும் இந்தத் தொகுதி இந்திய சமூகத்தினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தனேஷ் பாசிலின் தந்தையார் டத்தோ பாசில் ஒரு காலத்தில் மலாக்கா மாநில ம.இ.கா.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக வலம் வந்தவர்.

அசஹான் தொகுதியில் கடுமையான போட்டி நிலவுவது இட்ரிஸ் ஹருணுக்கும் அம்னோ வேட்பாளர் பைஃருல் நிஸாம் ரோஸ்லானுக்கும் இடையேதான்.

இருந்தாலும் தனேஷ் பாசில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் எத்தனை வாக்குகளை – குறிப்பாக இந்திய வாக்குகளைப் பெறுவார் – என்பதைப் பொறுத்து தேசிய முன்னணி- பக்காத்தான் வெற்றி முடிவாகும். காரணம் 11 விழுக்காடு இந்திய வாக்காளர்களைக் கொண்ட தொகுதி அசஹான்.

இங்கு போட்டியிடும் மற்ற இரண்டு கூட்டணிகளின் வேட்பாளர்களும் மலாய்க்காரர்கள் என்பதால் இந்திய வாக்காளர்களில் பெரும்பான்மையினர் தனேஷ் பாசிலுக்கு சாத்தியமாக வாக்களிக்கும் சாத்தியமும் நிலவுகிறது.

23 விழுக்காடு சீன வாக்காளர்களையும் கொண்டது இந்தத் தொகுதி. மொத்தமுள்ள 16,011 வாக்காளர்களில் 64 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள். மற்றவர்கள் 2 விழுக்காட்டினர்.

எனவே, மலாய்க்காரர் அல்லாத சீன, இந்திய வாக்காளர்கள் யார் பக்கம் சாய்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அசஹான் தொகுதியின் வெற்றியாளர் நிர்ணயிக்கப்படுவார்.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் அம்னோவின் வேட்பாளர் 275 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே இங்கு வெற்றி பெற்றார். பாஸ் கட்சி அந்தத் தேர்தலில் 1,365 வாக்குகளைப் பெற்றது. பாஸ் கட்சியினால் ஏற்பட்ட இந்தப் பிளவும் அம்னோ குறுகிய வாக்கு வித்தியாசத்தில் அசஹான் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

அசஹான் தொகுதியில் மீண்டும் அம்னோ வெற்றி பெறுமா அல்லது கட்சி மாறிய இட்ரிஸ் ஹருண் பக்காத்தான் வேட்பாளராக வாகை சூடுவாரா?

தெரிந்து கொள்ள நாளை இரவு வரைக் காத்திருப்போம்!

-இரா.முத்தரசன்