(கடந்த நவம்பர் 2022-இல் ஆஸ்ட்ரோ விண்மீன் அலைரிசையில் ஒளியேறிய ‘வேங்கையன் மகன்‘ தொடர் தொலைக்காட்சி நேயர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது. அந்த முதல் தொடரிலேயே முத்திரை பதித்திருக்கிறார் அதன் இயக்குநர் தீபன் எம். விக்னேஷ். அவருடன் நடத்தப்பட்ட நேர்காணல்)
ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் அண்மையில் 22 பாகங்களைக் கொண்ட தொடராக வெளிவந்து பல தரப்பு தொலைக்காட்சி இரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது ‘வேங்கையின் மகன்’. சமூக ஊடகங்களில் இந்தத் தொடர் குறித்த பல கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. உள்நாட்டில் உருவாகும் தொலைக்காட்சித் தொடர்களின் தரமும், தொழில் நுட்பமும், கலைஞர்களின் நடிப்புத் திறனும் பெருமளவில் வளர்ந்து வருகிறது என்பதற்கு இன்னோர் உதாரணமாகத் திகழ்கிறது இந்தத் தொடர்.
இந்தத் தொடரைக் காணத் தவறியவர்கள் ஆஸ்ட்ரோ ஓன் டிமாண்ட் (Astro On Demand) அலைவரிசையில் எப்போதும் பார்த்து மகிழலாம்.
வேங்கையின் மகன் தொடரின் இயக்குநர் தீபன் எம்.விக்னேஷூடன் நடத்தப்பட நேர்காணலில் அந்தத் தொடரின் பின்னணி, சில சுவாரசியங்கள் குறித்து அவர் விவரித்தார்.
கே: வேங்கையன் மகன் தொடரை இயக்கியதற்கான உங்களின் உத்வேகம் என்ன ?
ப: எனது தந்தை ஒரு வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். எனது விடுமுறை நாட்களில் நான் அவருடைய நிறுவனத்திற்க்குச் செல்வது வழக்கம். அந்த காலக்கட்டத்தில் அதன் அடிப்படையில் ஒரு நிகழ்ச்சியை இயக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால், வழக்குக் கோப்புகள், சட்டப் புத்தகங்கள், வாடிக்கையாளர்கள், உள்ளேயும் வெளியேயும் நடக்கும் காட்சிகள் என பல அம்சங்களால் நான் அந்த சூழலுக்கு ஈர்க்கப்பட்டேன். அதுவே நான் வேங்கையன் மகன் தொடரை இயக்கியதற்கான உத்வேகம். அதுமட்டுமல்லாமல், மகன் தனது தந்தையின் மகத்துவத்தை மெதுவாகப் புரிந்துக் கொள்ளும் தந்தை-மகன் உறவை அடிப்படையாகக் கொண்டக் கதையை இயக்க விரும்பினேன்.
கே: வேங்கையன் மகன் தொடரை இயக்கிய உங்களின் குறிப்பிடத்தக்க நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ளவும்?
ப: வேங்கையன் மகன் தொடரை இயக்கியப் போது பல சுவாரசியமான நினைவுகள், சம்பவங்கள் இருந்தன. என்னைப் பொறுத்தவரை, குறிப்பிடத்தக்க நினைவுகள் என்றால் நீதிமன்ற அறைக் காட்சிகள். ஆரம்பத்தில், புத்ராஜெயா உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற முயற்சித்தோம், ஆனால், கடைசி நிமிடத்தில் எங்களால் அதைப் பெற முடியவில்லை. அதற்குப் பதிலாக, யு.எஸ்.ஐ.எம் நீலாயில் (USIM, Nilai) உள்ள மாதிரி நீதிமன்ற அரங்கில் அனுமதி கிடைத்தது. நீதிமன்ற அறையில் சித்தரிக்கப்படும் அனைத்துக் காட்சிகளும் நடிப்பு மற்றும் படைப்பு ரீதியில் மிகவும் சவாலானதாக இருந்ததால் நேர வரம்புகள் காரணமாக அந்த மூன்று நாட்களின் படப்பிடிப்புகளும் எங்களுக்கு மிகவும் சவாலானதாக இருந்தன. ஆனால், எதையும் சமரசம் செய்யாமல் எங்களால் சிறப்பாகப் பணியை முடிக்க முடிந்தது. நிர்வாகத்தைச் சிறப்பாகக் கையாண்டத் தயாரிப்புக் குழுவினர், நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி.
கே: வேங்கையன் மகன் தொடருக்கு கிடைத்த வரவேற்பு எப்படி இருந்தது?
கே: துவங்கிய முதல் வாரத்திலிருந்தே இத்தொடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. பொதுவாக அனைவரிடமிருந்தும் எங்களுக்கு கிடைத்த முதல் பாராட்டு, முதல் அத்தியாயத்திலேயே (எபிசோட்டிலேயே) கதை விறுவிறுப்புடன் துவங்கி விட்டது என்றும், ஒவ்வொரு எபிசோட் முடிவிலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பை தூண்டும் விதத்திலும் அமைந்திருப்பதாக கூறினர். நடிகர் நடிகையர்களின் இயல்பான நடிப்பும் எதார்த்தமான வசனங்களும் இத்தொடருக்கு பெரும் பலமாக இருப்பதாக கூறினர். நிறைய ரசிகர்கள் வெகு நாட்கள் கழித்து ஓர் உள்ளுர் தொடர் தங்களின் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து பார்க்க வைக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் பாராட்டியுள்ளனர்.
கே: உங்களின் இரசிகர்களுக்காக ஏதாவது ஒரு செய்தி…
ப: இவ்வேளையில் எங்கள் தொடரைக் காட்சிப்படுத்தப் பொன்னான வாய்ப்பை வழங்கிய ஆஸ்ட்ரோவுக்கும், இத்தொடரின் தயாரிப்பாளர்களான ரேவதி மாரியப்பன் மற்றும் சுகனேஷ்வரனுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரசிகர்கள் அதிக உள்ளூர் உள்ளடக்கத்தை ஆதரிப்பார்கள் என நான் நம்புகிறேன். ஏனெனில், இது எதிர்காலத்தில் அதிக உள்ளூர் உள்ளடக்கத்தை உருவாக்க வழி வகுக்கும்.
டும் டும் டுமீல் திரைப்படத்தின் இயக்குநர் தீபன்
வேங்கையின் மகன் தொடரை இயக்கிய தீபன் எம்.விக்னேஷ், கடந்த நவம்பர் 2022-இல் வெளிவந்த ‘டும் டும் டுமீல்’ என்னும் உள்ளூர் திரைப்படத்தையும் இயக்கிவராவார். இந்தப் படமும் சிறப்பான உள்ளடக்கத்திற்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றது.
சைபர் ஜெயாவிலுள்ள மல்டி மீடியா பல்கலைக் கழகத்தில் மின்னியல் தொலைத் தொடர்பு துறையின் பொறியியல் பட்டதாரியான தீபன் பின்னர் புதுடில்லியில் உள்ள சினிமாப் பயிற்சிக் கல்லூரி ஒன்றில் ஓராண்டு காலம் திரைப்பட நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் இரண்டு ஆண்டுகள் துணை இயக்குநர்களில் ஒருவராகப் பணியாற்றினார் தீபன். பாரதிராஜாவின் ‘அன்னக் கொடி’ திரைப்படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘கொரில்லா’ படத்தின் இணை இயக்குநராகவும் பணியாற்றினார்.
தொடர்ந்து சில உள்ளூர் தொடர்கள், திரைப்படங்கள் உருவாக்க முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார் தீபன் எம்.விக்னேஷ்.