மாலே (மாலத் தீவுகள்) – கேரளாவுக்கு அடுத்து இந்தியக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் தீவுகளைக் கொண்ட நாடு மாலத் தீவு. சுற்றுப் பயணத்திற்கு புகழ்பெற்ற இடம். அழகான கடற்கரைகளைக் கொண்ட நாடு.
அண்மையில் இந்த நாட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். ஜனவரி 2-ஆம் தேதி தமிழ் நாட்டு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலத் தீவுகளுக்கு சென்றார்.
இந்நிலையில் மோடிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களைப் பகிர்ந்ததற்காக மாலத்தீவு அரசாங்கம் அதன் இரண்டு அமைச்சர்களை ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்ததாக மாலத்தீவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இளைஞர் ஆக்கத்திற்கான துணை அமைச்சர் மரியம் ஷியூனா மற்றும் போக்குவரத்து துணை அமைச்சர் ஹசன் ஜிஹான் ஆகியோரை அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கும் முடிவை மாலத் தீவு அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
இந்தியப் பிரதமர் மோடியை “கோமாளி” என்றும் “பொம்மை” என்றும் இவர்கள் தங்களின் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தனர்.
பின்னர் அவர்களின் அந்தப் பதிவுகள் எக்ஸ் தளங்களில் இருந்து அகற்றப்பட்டன. இந்தியாவும் இதுகுறித்து தன் ஆட்சேபங்களைப் பதிவு செய்திருந்தது.
இந்தியாவிலும் மோடிக்கு எதிரான இந்தக் கருத்துகளுக்கு கடுமையான கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
மோடிக்கு எதிரான தரக்குறைவான கருத்துக்களை மாலத்தீவு அரசு நிராகரித்துள்ளது, அவை மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துகள் அல்ல என்றும் அது தெரிவித்தது.