கோலாலம்பூர்: ஆளும் மடானி ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் உறுப்பியக் கட்சியாக மஇகா தொடர்ந்தாலும், அரசாங்கம் மீதான அந்தக் கட்சியின் அதிருப்திகளை மஇகா தலைவர்கள் அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அண்மையில் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மலாய் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் அன்வார் இப்ராகிமின் போக்கையும், மடானி அரசாங்கத்தின் கொள்கைகளையும் கடுமையாகச் சாடியிருந்தார்.
மஇகா மரியாதை இல்லாத இடத்தில் இனியும் தொடர வேண்டுமா என அக்டோபரில் முடிவு செய்யும் என்றும் சரவணன் கூறியிருந்தார். மஇகாவின் ஆண்டுப் பொதுப் பேரவை எதிர்வரும் அக்டோபரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த சில வாரங்களாக மஇகா மாநில மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாடுகளில் மஇகா தேசிய முன்னணியில் இருந்து வெளியேற வேண்டுமா என்ற விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆகக் கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்ற சிலாங்கூர் மாநில மாநாட்டிலும் தேசிய முன்னணியா, பெரிக்காத்தான் நேஷனலா – எந்தக் கூட்டணியில் சேர்வது என்பதை மஇகாவின் தேசியத் தலைமைத்துவம் முடிவு செய்யட்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் – இதில் இரகசியம் ஏதுமில்லை என மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் எதிர்வரும் அக்டோபரில் மஇகா பொதுப் பேரவை நடைபெறும்போது ஒரு தீர்மானம் மூலம் மஇகா தேசிய முன்னணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்கலாம் என்ற பரபரப்பு மஇகா வட்டாரங்களில் ஏற்படத் தொடங்கியுள்ளது.
ஏறத்தாழ அதே காலகட்டத்தில் மசீசவின் ஆண்டுப் பொதுப் பேரவையும் நடைபெறுகிறது. மசீசவும் அந்தப் பொதுப் பேரவையில் தேசிய முன்னணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்கும் எனக் கருதப்படுகிறது.
இரண்டு பாரம்பரியக் கட்சிகளும் ஒரே நேரத்தில் தேசிய முன்னணியில் வெளியேறினால் அது தேசிய முன்னணியின் முக்கியக் கட்சியான அம்னோவுக்கு பெரும் பாதிப்பாக அமையக் கூடும்.
மஇகா தேசிய முன்னணியிலிருந்து வெளியேறக் கூடாது என தேசிய முன்னணி – அம்னோ தலைவரான சாஹிட் ஹாமிடி கேட்டுக் கொண்டுள்ளார்.
மஇகா முடிவு குறித்து கருத்துரைத்த அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ ஆனந்தன், தேசிய முன்னணியில் இருந்து வெளியேறும் முடிவு என்பது பிரதமருக்கான ஆதரவை மீட்டுக் கொள்வது எனப் பொருள்படாது-மாறாக அடுத்த பொதுத் தேர்தல்வரை டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமர் பதவியில் தொடர ஆதரவு வழங்கி வரும் எனத் தெரிவித்துள்ளார்.





