பினாங்கு, மே 4 – பினாங்கில் வாக்காளர்களைக் கவர்வதற்காக ரொக்கப் பணம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்து கொண்டிருந்த தருணத்தில், இறுதிக் கட்ட பிரச்சாரமாக பினாங்கு தீவின் எஸ்பிளனேட் என்ற இடத்தில் நடைபெற்ற ஜசெகவின் பிரச்சாரக் கூட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு சுமார் லட்சம் பேர் திரண்டனர்.
பினாங்கு அரசியல் கூட்ட வரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரிய கூட்டம் என்றும் கூறப்படுகின்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய லிம் கிட் சியாங் “இன்று எனது தொகுதியான கேலாங் பாத்தாவில் இருக்க வேண்டிய நான், பணம் கொடுத்து பினாங்கில் வாக்குகளை வாங்குகின்றார்கள் என்று கேள்விப்பட்டவுடன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்றேன். எனது மருமகள் வாக்குகளுக்காக பணம் கொடுக்கப்படும் செய்கையைக் கண்டித்து தனது தலையை மொட்டையடித்துக் கொண்டுள்ளது குறித்து மிகவும் ஆத்திரப்படுகின்றேன்” என்றும் கூறினார்.
இந்த மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் 505,000 ரிங்கிட் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. மக்கள் நேற்று நள்ளிரவைத் தாண்டியும் அங்கு கூடியிருந்து மக்கள் கூட்டணிக்குத் தங்களின் ஆதரவைப் புலப்படுத்திக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“நாட்டின் பராமரிப்பு அரசாங்கத்தின் தலைவர் என்ற முறையில் பணம் கொடுத்து வாக்குகள் வாங்கும் சம்பவங்களுக்கு நஜிப்தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்காக பினாங்கு மக்கள் கண்ணீர் விட்டு அழுகின்றார்கள். நமது நிலைமை அவ்வளவு கேவலமாகவா போய்விட்டது எனக் கேட்கின்றார்கள். எனவே, நஜிப் துன் ரசாக்கை தேசிய முன்னணி அரசாங்கத்தின் கடைசி பிரதமராக்க மே 5ஆம் தேதி முடிவு செய்வோம்” என்று கிட் சியாங் முழக்கமிட்டார்.
கோ சூன் லாய் என்ற சீன வர்த்தகப் பிரமுகம் தேசிய முன்னணி கூட்டம் ஒன்றில் ஆளுக்கு 100 ரிங்கிட் வழங்கியதாகவும் அதை வாங்க கூட்டத்தினர் முண்டியடித்ததாகவும் அதன் பின்னர் அந்த சீன வர்த்தகர் 20 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கி ஓர் அறக்கட்டளை நிறுவப் போவதாக அறிவித்ததாகவும் சீனப் பத்திரிக்கைகள் தகவல்கள் வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.