சென்னை, மே 4- நுகர்வோர்களுக்கு மின் கட்டண உயர்வு இருக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது மின் கட்டண உயர்வு குறித்த கூட்டத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நடத்தி வருவதாகவும், மின் கட்டண உயர்வு தமிழகத்தில் இருக்குமா என்றும் மார்க்சிஸ்ட் உறுப்பினர் கே.பாலபாரதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதில்:-
ஒவ்வொரு ஆண்டும் மின்சாரக் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவுறுத்துகிறது. அப்படி கட்டணத்தை மாற்றாவிட்டால் மாநிலங்களுக்கு உள்ள நிதியுதவிகள் அனைத்தையும் நிறுத்த விதி உள்ளதாகக் குறிப்பிடுகிறது.
இந்தச் சூழ்நிலையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் ஏதும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு இல்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின்சாரக் கட்டணத்தை திருத்தி அமைத்து அமல்படுத்தச் சொன்னாலும் அதற்கான சுமையை அரசே ஏற்கும்.
கூடுதல் கட்டணச் சுமை நுகர்வோர்களிடம் சுமத்தப்படாது. கட்டணம் மாற்றியமைக்கப்பட்டால் எவ்வளவு என்பது குறித்து அறிந்து அதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று மக்கள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலளித்தார்.