Home நாடு கடந்த கால ம.இ.கா தலைமைத்துவத்தில் தோட்ட மக்கள் கைவிடப்பட்டார்களா? – டான்ஸ்ரீ வடிவேலு விளக்கம்!

கடந்த கால ம.இ.கா தலைமைத்துவத்தில் தோட்ட மக்கள் கைவிடப்பட்டார்களா? – டான்ஸ்ரீ வடிவேலு விளக்கம்!

647
0
SHARE
Ad

vadiveluசிலாங்கூர், மே 4- கடந்த காலத்தில் ம.இ.கா-தேசிய முன்னணி ஆட்சியில் சிலாங்கூர் மாநிலத்தில் தோட்டப் பாட்டாளிகளுக்கு முறையான வாய்ப்பும் வீட்டுடமைத் திட்டங்களும் அமையவில்லை என எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முன்னாள் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினரும், ம.இ.கா வின் முன்னாள் தலைமைச் செயலாளருமான டான்ஸ்ரீ ஜி.வடிவேலு பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட அறிக்கையொன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

தனது அறிக்கையில் அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:-

“நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல் கூட்டணி அரசாங்கமும், அதற்கு பிறகு அமைந்த தேசிய முன்னணி அரசாங்கமும் நாட்டின் மேம்பாட்டிலும், அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், சமூகவியல் பொருளாதாரத் துறைகளில் பிரதிரூப மாற்றங்களைக் கொண்டு வந்து எடுத்த நடவடிக்கைகளிலும்  மேற்கொண்ட முயற்சிகளிலும்  நாட்டு மக்களுக்கு முனேற்றத்தையும்,  வளர்ச்சியையும் கொண்டு வந்துள்ளதை மறுக்க முடியாது”

#TamilSchoolmychoice

“நாடு துரித வளர்ச்சியையும் பொருளாதார மேம்பாடுகளைக் காணும் போது எல்லா நிலைகளிலும்  உருமாற்றம்  ஏற்படுவது இயல்பான ஒன்று.”

“அந்த வகையில் நாடு விவசாயத் துறையையே நம்பியிராமல் தொழில் மயத்திற்கு மாறும்போது பல தோட்டங்கள் மேம்படுத்தப்பட்டன, துண்டாடப்பட்டன. அத்துடன் பல தோட்டங்கள் ரப்பர் துறையில் இருந்து செம்பனை துறைக்கு உட்படுத்தப்பட்டு மறுநடவுகள் மேற்கொள்ளப்பட்டன.”

“சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகமான தோட்டங்கள் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.”

இந்தியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ம.இ.கா நடவடிக்கை எடுத்தது

“ஆங்காங்கே பல ஆண்டுகளாக  தோட்ட தொழிலாளர்களாக வாழ்ந்த  இந்திய சமுதாயம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய  தேசிய முன்னணி  அரசாங்கமும், மஇகாவும் எல்லாக் கால கட்டத்திலும்  பல நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் பல உள்ளன” என்று முன்னாள் மேலவை சபாநாயகரும் வழக்கறிஞரும், மூத்த அரசியல்வாதியுமான டான்ஸ்ரீ ஜி. வடிவேலு (படம்) விளக்கியுள்ளார்.

“இதில் பங்காற்றிய  மஇகா தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு, டத்தோ வி.எல் காந்தன், டத்தோ கு.பத்மநாபன், டான்ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம், டான்ஸ்ரீ எம். மகாலிங்கம், டத்தோ த.ம.துரை, டத்தோ கே.சிவலிங்கம், டான்ஸ்ரீ என்.எஸ் மணியம் ஆகியோராவார்கள்” என்று குறிப்பிட்டுள்ள வடிவேலு, சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தானும் இது போன்று நிறைய திட்டங்களில் இந்தியர்கள் பயனடைய முயற்சிகள் மேற்கொண்டதாகவும் அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“இதன் அடிப்படையில் சிலாங்கூர் மாநிலத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வில், தோட்டத்தில் இருந்து மறு குடியேற்றம் செய்யப்பட்ட வீடமைப்பு திட்டங்கள், நிலத்திட்டங்களின் பட்டியல் இப்பிரச்சனைக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது” என்றும் வடிவேலு விளக்கம் அளித்துள்ளார்.

எடுத்துக் கொள்ளப்பட்ட தோட்டங்களை தவிர்த்து, புக்கிட் திகி (கிள்ளான்), பிராங் பெசார் (புத்ரா ஜெயா), புக்கிட் கமுனிங், லாடாங் வலம்பரோசா (காப்பார்), லாடாங் நோர்த் ஹம்மோக், சீஃபீல்டு, ஆயர் ஈத்தாம் டின், கம்போங் டிஎன்பி, கம்போங் கோஸ்கான்  ஆகிய இடங்களிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் பெற்றுத் தரப்பட்டுள்ளன.