Home 13வது பொதுத் தேர்தல் தேசிய முன்னணி 133 – மக்கள் கூட்டணி 89: மக்களின் கலவையான மனோநிலையைக் ...

தேசிய முன்னணி 133 – மக்கள் கூட்டணி 89: மக்களின் கலவையான மனோநிலையைக் காட்டும் நாடாளுமன்ற முடிவுகள்!

718
0
SHARE
Ad

Feature-Parlimen-Buildingமே 6 – நேற்று நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் படி மொத்தம் உள்ள 222 இடங்களில் தேசிய முன்னணி 133 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் மத்தியில்   ஆட்சி அமைக்கும் அதே வேளையில் மக்கள் கூட்டணியோ முன்பை விட கூடுதலாக 7 இடங்களைப் பெற்று 89 இடங்களைப் பிடித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் மக்கள் கூட்டணி முன்பை விட கூடுதலாக 7 தொகுதிகள் வென்று சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது என்றே கூற வேண்டும்.

ஆனால், இன்னொரு கண்ணோட்டத்தில் மக்கள் கூட்டணிக்கு கூடிய கூட்டம், மத்திய அரசாங்கத்தை அமைப்பதில் அவர்களுக்கு இருந்த தெளிவான வாய்ப்பு – இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால் அவர்களுக்கு இது பலத்த தோல்வி – பின்னடைவு என்றே கூறவேண்டும்.

அதேவேளையில் அரசியல் ஆய்வாளர்கள் துல்லியமாகக் கணித்து இதுதான் காரணம் என்று கூற முடியாத அளவுக்கு வாக்காளர்கள் மிகவும் கலவையான, ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத முடிவுகளைத் தெரிவித்திருக்கின்றார்கள்.

மேலோட்டமாக இந்த பொதுத் தேர்தல் நாடாளுமன்ற முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது வெற்றி, தோல்விக்கான காரணங்களாக – ஏன் இந்த முடிவுகள் மக்களின் கலவையான மனோநிலையைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றன என்பதைப் பின்வரும் அம்சங்களைக் கொண்டு குறிப்பிடலாம்.

மலாய்க்கார வாக்குகள் மக்கள் கூட்டணிக்கு வரவில்லை

நாடு முழுமையிலுமுள்ள மலாய்க்கார வாக்காளர்கள் மக்கள் கூட்டணிப் பக்கம் திரும்புவதை பல்வேறு வியூகங்களைக் கொண்டு அம்னோ தடுத்து நிறுத்தி விட்டது உறுதியாகத் தெரிகின்றது.

மலாய்க்காரர்களின் கோட்டையாகக் கருதப்படும் – அவர்களின் உணர்வுகளை எப்போதும் பிரதிபலித்து வந்துள்ள கோலாலம்பூர் கம்போங் பாரு பகுதியை உள்ளடக்கிய தித்திவாங்சா தொகுதியில் மீண்டும் அம்னோ வென்றுள்ளதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

நாடு முழுமையிலும் உள்ள மலாய்க்காரர்களின் மன ஓட்டத்தை ஓரளவுக்கு பிரதிபலிப்பதாக இந்த தித்தி வாங்சா வெற்றியைக் குறிப்பிடலாம்

கடந்த முறை மக்கள் கூட்டணி சார்பாக பாஸ் கட்சி வென்ற தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் மலாய்க்கார வாக்காளர்களின் அபரிதமான ஆதரவு இல்லாமல் சிலாங்கூரில் இத்தனை பெரிய வெற்றியை மக்கள் கூட்டணி பதிவு செய்திருக்கவும் முடியாது.

எனவே ஒரேயடியாக மலாய்க்கார வாக்குகள் மக்கள் கூட்டணிக்கு வரவில்லை என்றும் கூற முடியாது

சிறந்த நிர்வாகம், நகர்ப்புற மக்கள், சீன வாக்குகள் அதிகமாக இருக்கும் மாநிலம் என்பதால் அவர்களின் ஆதரவு, சுல்கிப்ளி நோர்டின் விவகாரத்தால் தேசிய முன்னணியிடமிருந்து விலகிச் சென்ற இந்திய வாக்குகள் என சில காரணங்களை   சிலாங்கூர் மாநிலத்தில் மக்கள்  கூட்டணி வெற்றி பெற்றதற்கான காரணங்களாகக் கூறலாம்.

அரசு ஊழியர்களின் வாக்குகள் அம்னோவுக்கே சென்றன

அரசாங்க ஊழியர்கள் எப்போதும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள் என்பது தெரிந்ததுதான்.

இந்த முறையும் தங்களின் வாக்கு யாருக்கென்று தெரிந்துவிட்டால் தங்களின் அரசாங்க பதவி உயர்வு வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக அவர்கள் மக்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை.

அதோடு, மத்திய அரசாங்கம் மாறப் போகின்றது என்ற அச்சம், அரசாங்க ஊழியர்களிடையே குறிப்பாக மலாய்க்காரர்களிடையே வெகுவாகப் பரவி அதை தடுத்து நிறுத்தும் விதமாகவும் அவர்கள் அம்னோ-தேசிய முன்னணிக்கு வாக்களித்திருக்கலாம்.

அரசு ஊழியர்களை அதிகமாகக் கொண்ட புத்ரா ஜெயாவில் பாஸ் கட்சியின் பலமான வேட்பாளர் ஹூசாம் மூசா 5 ஆயிரம் வாக்குகளுக்கும் கூடுதலான வித்தியாசத்தில் அடைந்த தோல்வி இதைத்தான் காட்டுகின்றது.

சீன வாக்குகள் மக்கள் கூட்டணிக்கு சென்றன

சீன வாக்குகள் எதிர்பார்த்தபடி மக்கள் கூட்டணிக்கே – ஜசெக வின் பிரச்சார பலத்தால் – சென்றன என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

மசீசவின் மோசமான தோல்வி, ஜோகூர் மாநிலத்தில் ஜசெகவின் ஊடுருவல், பினாங்கு, சிலாங்கூர் மாநிலங்களில் அபரிதமான வெற்றி என பல உதாரணங்களை இதற்கு விடையாகக் காட்டலாம்.

இறுதி நேர தொகுதி மாற்றங்கள் – வேட்பாளர் மாற்றங்களால் மக்கள் கூட்டணிக்கு பாதிப்பு

பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க மக்கள் கூட்டணி தாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என அதிகப்படியான நம்பிக்கையை வைத்துவிட்டது தெரிகின்றது.

அவர்களின் கூட்டத்திற்கும் ஆயிரக்கணக்கில் கூட்டம் சேர அவர்களின் நம்பிக்கையும் கூடிக் கொண்டே போனது.

இதனால் தொகுதிகளைப்  பரிமாறிக் கொண்டதும் இறுதி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றியதும் – பந்தாடியதும் அவர்களுக்கு பாதகமாகவே முடிந்தது.

வேட்பு மனுவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக கேமரன் மலைக்கு தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரனைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது, பாரம்பரிய ஜசெக தொகுதியான செகாமாட்டுக்கு பிகேஆர் வேட்பாளராக சுவா ஜூய் மெங்கை மாற்றியது போன்றவை மக்கள் கூட்டணிக்கு பாதகமாக அமைந்தன.

இரண்டு வார கால பிரச்சாரத்தில் 400 வாக்குகள் வித்தியாசத்தில் மனோகரன் கேமரன் மலையில் வெற்றியை நெருங்கி வந்து விட்டதை வைத்துப் பார்க்கும்போது அந்த தொகுதியில் முன்பாகவே சரியான வேட்பாளரை நிறுத்தியிருந்தால் கூடுதல் அவகாசம் வழங்கியிருந்தால் அந்த தொகுதியை வென்றிருக்க முடியும்.

அதே போன்று பாரம்பரியமாக ஜசெக போட்டியிட்ட செகாமாட் தொகுதியில் கடைசி நேரத்தில் சுவா ஜூய் மெங் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட குழப்பத்தினால் தேசிய முன்னணி அங்கே மீண்டும் சுலபமாக வெல்ல முடிந்தது.

புத்ரா ஜெயாவையும் மற்றொரு உதாரணமாகக் கூறலாம். கிளந்தானோடு எப்போதும் அடையாளப்படுத்தப்பட்ட ஹூசாம் மூசா அங்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது வாக்காளர்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதையே அந்த தொகுதியின் முடிவுகள் காட்டுகின்றன.

உலுசிலாங்கூர் தொகுதியிலும் திடீரென வெளியூர் வேட்பாளர் ஒருவர் – அவர் அன்வாருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றே இருந்தாலும் – கொண்டு வந்து நிறுத்தப்பட்டதை மக்கள் விரும்பவில்லை என்பதையே அங்கு பிகேஆர் அடைந்த தோல்வி உணர்த்துகின்றது.

மக்கள் புதிய – உத்வேகமான தலைவர்களை விரும்புகின்றார்கள்.

கெடா மாநிலத்தில் பாஸ் கட்சியின் மந்திரி பெசார் முறையான ஆட்சியை வழங்கவில்லை என கடந்த ஆண்டுகளில் பல புகார்கள் எழுந்தும் அதைப் பற்றி பாஸ் கட்சியும் அக்கறை கொள்ளவில்லை. மக்கள் கூட்டணி தலைவர்களும் கண்டு கொள்ளவில்லை.

பொதுத் தேர்தல் நேரத்திலும்கூட கெடா மாநிலத்திற்கான புதிய தலைமைத்துவத்தை மக்கள் கூட்டணி அறிமுகப்படுத்தவில்லை.

மாறாக, தேசிய முன்னணியோ இளமையான முக்ரிஸ் மகாதீரை மந்திரி பெசார் வேட்பாளராக முன்மொழிந்தது. மகாதீரின் பிரபல்யமும் கூட சேர்ந்து கொள்ள அம்னோ-தேசிய முன்னணியால் மீண்டும் கெடாவைக் கைப்பற்ற முடிந்தது.

இதிலிருந்து மக்கள் புதிய, இளமையான, உத்வேகமிக்க தலைவர்களை விரும்புகின்றார்கள் என்பது அரசியல் கட்சிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி.

சிறந்த தலைமைத்துவங்களுக்கு அங்கீகாரம்

அதேபோன்று பினாங்கு, சிலாங்கூர் மாநிலங்களில் சிறந்த முறையில் தலைமைத்துவத்தை வழங்கி, அரசாங்க நிர்வாகங்களை சீர்படுத்தி, ஊழல் விவகாரங்களை வெகுவாகக் குறைத்து, மாநில நிதிக் கையிருப்பை உயர்த்திக் காட்டிய லிம் குவான் எங், காலிட் இப்ராகிம் போன்ற தலைவர்களின் தலைமைத்துவ பண்புகளுக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கி மற்றொரு வாய்ப்பு வழங்கியிருக்கின்றார்கள் என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இவ்வாறாக, பல்வேறு கலைவயான செய்திகளோடும், எப்படி இருக்கின்றது மக்களின் மன ஓட்டம் என்பதைப் புரிந்து கொள்ளாத முறையிலும் முடிந்துள்ளது இந்த 13வது பொதுத் தேர்தல்.

போகப் போக, தொகுதி வாரியாக – மாநில வாரியாக நாம் ஆராய்ந்து பார்க்கும்போது  இந்த பொதுத் தேர்தல் குறித்த வேறு சில கண்ணோட்டங்களும், முடிவுகளும் நமக்குத் தெரிய வரும்.

-இரா.முத்தரசன்