மே 7 – வழக்கமாக தேசிய முன்னணி வெல்லும் மாநிலங்களில் ம.இ.கா சார்பாக, இந்தியர் பிரதிநிதித்துவம் என்று ஒர் ஆட்சிக் குழு உறுப்பினர் பதவி தரப்படுவது வழக்கம்.
ஆனால், இந்த முறை கெடா மாநிலத்தில் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தாலும் அங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் ம.இ.காவுக்கோ, இந்தியருக்கோ கிடைக்காது.
காரணம், அங்கு போட்டியிட்ட இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் ம.இ.கா தோல்வி அடைந்தது.
பேராக் மாநிலத்திலும் இதே நிலைமை!
இதே நிலைமைதான் பேராக் மாநிலத்திற்கும்!
அங்கு நான்கு தொகுதிகளை வைத்திருந்த ம.இ.கா, ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்தது எவ்வளவு தவறான அரசியல் முடிவு என்பது இப்போது ம.இ.காவினர்க்கு தெரிந்திருக்கும்.
காரணம், ஏதாவது ஒரு தொகுதியில் வென்றிருந்தால் இன்றைக்கு பேராக் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும்போது ம.இ.கா சார்பாக ஓர் இந்தியருக்கு ஆட்சிக் குழு உறுப்பினர் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
இன்றைக்கு அதனை இழந்து நிற்கின்றது ம.இ.கா!
மாநில சட்டமன்றத்தின் அவைத் தலைவர் பதவியாவது மீண்டும் கிடைக்குமா என்பதை இனி பொறுத்திருந்து பார்ப்போம்!
சட்டமன்றத்திற்கு பதிலாக ம.இ.கா செனட்டர் பதவியைப் பெற்றுள்ளது என்றாலும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற பலம் பொருந்திய பதவியைக் கொண்டு பல அரசியல் நடவடிக்கைகளை மாநிலத்தில் மேற்கொள்ளலாம் என்பதோடு இந்தியர்களுக்கு பல உதவித் திட்டங்களையும் மேற்கொள்ளலாம்.
இப்போது அந்த வாய்ப்பை ம.இ.கா இழந்து நிற்கின்றது.
பகாங்கில் ஒரே சட்டமன்றத்தையும் இழந்த ம.இ.கா
பகாங் மாநிலத்தில் எப்போதும் ம.இ.காவுக்கு ஒரு சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்படும். முன்பு கேமரன் மலையிலுள்ள தானா ராத்தா சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு அதில் கேமரன் மலை ம.இ.கா பிரமுகரான அமரர் சங்கரலிங்கம் இரண்டு தவணைகள் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
அதன்பின்னர் கேமரன் மலை தனி நாடாளுமன்றமாக மாற்றியமைக்கப்பட்டபோது சபாய் சட்டமன்றம் அதற்கு மாற்றாக வழங்கப்பட்டு அதில் டத்தோ தேவேந்திரன் இரண்டு தவணைகள் வென்றார்.
ஆனால் கடந்த முறை அங்கு போட்டியிட்ட ஜசெகவின் காமாட்சி துரைராஜூ வெறும் 145 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றியை இழந்தார்.
ஆனால் இந்த முறை 117 வாக்குகள் கூடுதலாக பெற்று அதே சபாய் தொகுதியில் ம.இ.கா வேட்பாளரான குணசேகரனைத் தோற்கடித்துள்ளார்.
இதனால் பகாங் மாநிலத்தில் இருந்த ஒரே சட்டமன்ற பிரதிநிதித்துவத்தை ம.இ.கா இழந்துள்ளதோடு, ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியை அடையும் வாய்ப்பையும் இம்முறையும் இழந்து விட்டது.
இருப்பினும் சட்டமன்ற, ஆட்சிக் குழு பிரதிநிதித்துவம் இல்லாத இந்த மாநிலங்களில் எல்லாம் மந்திரி பெசாரின் இந்தியர் விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்பு அதிகாரிகளாக ம.இ.கா தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிகின்றது.
அவர்கள் யார் என்பதும் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்!