இலங்கை, மே 8- இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் பிரிட்டிஷ் ராணி இரண்டாவது எலிசபெத் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக இளவரசர் சார்லஸ் அனுப்பி வைக்க இருக்கிறார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது.
1973-ம் ஆண்டுக்குப் பின் இப்போதுதான் முதல்முறையாக காமன்வெல்த் நாடுகள் மாநாடு எலிசபெத் ராணியின் பங்கேற்பு இல்லாமல் நடைபெறவுள்ளது.
எலிசபெத் ராணி இந்த ஆண்டில் இன்னும் 400 நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியுள்ளது. வயதாகிவிட்டதால், அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல், போர்க் குற்றங்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அங்கு காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் ராணி எலிசபெத் இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
காமன்வெல்த் அமைப்பில் மொத்தம் 54 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை முன்பு பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தவையாகும்.