மெல்பெர்ன், மே 9 – ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்பெர்ன் நகரில் படித்து வரும் மலேசிய மாணவர்கள் பலர், நேற்று அங்குள்ள விக்டோரியா நூலகத்திற்கு முன் ஒன்று கூடி, நியாயமான தேர்தல் வேண்டும் என்று அமைதிப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
தேர்தலுக்குப் பிறகு மலேசியா இருளில் மூழ்கிவிட்டது என்று கூறிய அவர்கள், தாங்கள் சீனர், மலாய், இந்தியர் என்ற இன வேறுபாடுகள் இன்றி மலேசியர்களாக வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதால், தற்போது மலேசியாவில் நடந்து வரும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான எதிர்கட்சியினரின் போராட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும், அதனால் சிறிய அளவிலான அமைதிப் போராட்டத்தை நடத்தி தங்களது ஆதரவை தெரிவிப்பதாகவும் முகநூல் வாயிலாக செய்தி வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் போராட்டத்தின் முக்கிய கருப்பொருளாகக் கீழ்க்காணும் வாசகங்களை கூறியுள்ளனர்:-
நீங்கள் சீனர்களா? – இல்லை
நீங்கள் மலாய்காரர்களா ? – இல்லை
நீங்கள் இந்தியர்களா? – இல்லை
பிறகு நீங்கள் யார்? – நாங்கள் மலேசியர்கள்
மேலும் மலேசியாவில் இனவேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(படம் – முகநூல்)